அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதுசெய்யப்பட்ட அதிமுக வட்டச் செயலாளர் சுதாகரை அதிமுகவில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அண்ணா நகரில் 10 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சதீஷ் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்ட புகாரில், அதிமுக தென்சென்னை வடக்கு மாவட்ட வட்டச்செயலாளர் சுதாகர் நேற்று சிறப்பு புலனாய்வுக்குழு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், சுதாகரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுகவின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும் அண்ணா நகர் மேற்கு பகுதியை சேர்ந்த 103வது அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.