ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
அதன்பின் பேரவையில் பேசிய மு.க.ஸ்டாலின், “மிகுவும் கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து இதுவரை 41 பேர் இறந்துள்ளனர். அந்த வேதனையோடுதான் உரையை தொடங்குகிறேன். சென்னையை சேர்ந்த சுரேஷ் ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.17 லட்சம் இழந்ததால் தற்கொலை செய்துகொண்டனர். சுரேஷ் தன்னைபோல் வேறு யாரும் ஆன்லைன் சூதாட்டத்தால் பலியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் கேட்டுகொண்டுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க சட்டத்தில் இயற்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தோம். ஆன்லைன் சூதாட்ட பாதிப்பு குறித்து நீதிபதி சந்துரு குழு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி அறிக்கை அளித்தது. நீதிபதி சந்துரு குழுவின் அறிக்கை அமைச்சரவை முன் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளை நீதிபதி சந்துரு குழு அறிக்கையில் விரிவாக கூறியிருந்தது.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என 10,735 மின்னஞ்சல்கள் வரப்பெற்றன. அதில் 27 பேர் மட்டுமே ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஆதரவாக வந்துள்ளன.
பொதுமக்களின் கருத்துக்கள் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அவசரசட்டத்தை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான மசோதா கடந்த அக்டோபரில் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. சட்டமசோதாவுக்கு உடனடியாக ஓப்புதல் அளிக்காமல் சில விளக்கங்களை ஆளுநர் கேட்டிருந்தார். ஆளுநர் ஒப்புதலுக்காக கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி மசோதா அனுப்பிவைக்கப்பட்டது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்திய ஆளுநர் சில விளக்கங்களை கேட்டிருந்தார். அந்த விளக்கங்களுக்கு 24 மணிநேரத்தில் சட்டத்துறை அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த சட்ட மசோதா மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்றத்தில் தெளிவு படுத்தியுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் 7-வது அட்டவணையில் 34 வது பிரிவில் ஆன்லைன் சூதாட்டங்கள் வருவதால் அவற்றை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. இனி ஒரு உயிர் பறிக்கப்படாமல் இனி ஒரு குடும்பம் நடுத்தெருவில் நிற்காமல் இருக்க இந்த சட்ட முன்வடிவை அனைவரும் ஆதரிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.