செஸ் விளையாட்டில் உலகின் நம்பர் 1 விளையாட்டு வீரராக உருவெடுப்பது தான் எனது லட்சியம் என்று பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார். அவர் பயின்று வரும் முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளி சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சமீபத்தில் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருது வழங்கும் விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து நாட்டின் இரண்டாவது மிக உயரிய விருதான அர்ஜுனா விருது பெற்ற செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் பயின்று வரும் முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளி சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழா நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பிரக்ஞானந்தாவை பாராட்டி வாழ்த்தினர். தொடர்ந்து பள்ளியின் சார்பில் ஊக்கத்தொகை ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், செஸ் விளையாட்டில் எதிர் வீரர் வைக்ககூடிய அடுத்த மூன்று நகர்வுகளை அறிந்து விளையாடக்கூடிய அளவிற்கு திறமையான அற்புத ஆற்றல் பெற்றவர் பிரக்ஞானந்தா. இந்தியாவிலே செஸ் விளையாட்டு தமிழ்நாட்டில் முக்கியத்துவம் பெறுவதற்க்கு காரணம் அதன் பிறப்பிடம் தமிழகத்தில் இருந்து உருவாகியது.
இந்தியாவில் மொத்தம் 76 செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 26 பேர். இந்தியாவின் செஸ் தலைநகர் சென்னை தான் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரக்ஞானந்தா, செஸ் ஒலிம்பியாட் போட்டி என்பது மிகப்பெரிய நிகழ்வு. இதை நடத்திய அரசுக்கு எனது நன்றி என்றும் 14 வருசமா செஸ் போட்டியில் பங்கேற்று வரும் எனக்கு ஒத்துழைப்பு அளித்த பள்ளி நிர்வாகத்திற்கும், போட்டியில் பங்கேற்றாலும் எனக்கு உறுதுணையாக இருக்கும் நண்பர்கள் மாணவர்களுக்கும் எனது நன்றி என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், படிப்பா இருந்தாலும் சரி விளையாட்டா இருந்தாலும் சரி முயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி அடைய முடியும் எனவும் உங்களை போன்றுதான் நானும் வரிசையில் அமர்ந்து சச்சின் முதல் நிறைய விளையாட்டு வீரர்கள் இதே மேடையில் பேசியதை பார்த்துள்ளேன். இன்று நான் மேடையில் பேசுகிறேன் என்னை பார்த்து நீங்களும் பல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எனது ஆசை என்றார். எனது அடுத்தக்கட்ட இலக்கு உலக சாம்பியன் ஆகுவதே. அதற்கு நல்ல முயற்சி செய்வேன் எனவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், பதக்கம் பெற்று மீண்டும் நான் படிக்கும் பள்ளிக்கு வந்துள்ளது எனக்கு சந்தோஷமாக உள்ளது என்றும் ஆசிரியர்கள் மற்றும் என் நண்பர்களுக்கு நன்றி என்றும் எல்லாம் அவர்கள் தந்த சப்போர்ட் தான் என்றும் அவர் தெரிவித்தார்.
ரேட்டிங்கை அதிகப்படுத்துவது தான் என்னுடைய இலக்கு. நான் தினமும் பயிற்சி எடுத்துக் கொண்டுதான் உள்ளேன். அர்ஜுனா விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு செஸ் போட்டி சார்ந்த வீரருக்கு விருது வழங்கப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் இந்த விருதை எதிர்பார்த்ததுதான் என்றார்.