Homeசெய்திகள்கட்டுரைபெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: இன எதிரிகளின் கருவியான சீமான்... கோவை கு.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: இன எதிரிகளின் கருவியான சீமான்… கோவை கு.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

-

- Advertisement -

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன எதிரிகளுடன் இணைந்துகொண்டு, அவர்களுக்கு கருவியாக செயல்படுவதால்தான் பெரியார் மீது அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கு.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

பெரியார் குறித்து சீமான் தெரிவித்துள்ள சர்ச்சை கருத்து தொடர்பாக த.பெ.தி.க  பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் காம இச்சை ஏற்பட்டால் தாயிடமோ, சகோதரியிடமோ தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதாக கூறியுள்ளார். தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆதாரம் இல்லாமல் பொய்யாக பிரச்சாரம் செய்வதில் வல்லவராக சீமான் இருந்து கொண்டிருக்கிறார். வரலாற்று சம்பவங்களை ஆதாரம் இல்லாமல் அவர் சொல்லலாம். இந்த சமூக மக்களுக்காகவும், உலக மக்களுக்காகவும் வாழ்ந்தவர் தந்தை பெரியார். பெண்களாலேயே பெரியார் என்று போற்றப்பட்டவர் தந்தை பெரியார். ஒரு ஆணாக பிறந்து பெண் சமூகத்தின் விடுதலைக்காகவும், பெண் உரிமைக்காகவும் அவரை போல பேசியதோ, எழுதியதோ, போராடியதோ உலகில் யாரும் கிடையாது. உச்சத்துக்கு சென்று பெண்களுக்காக கருத்துக்களை சொன்னவர் தந்தை பெரியார். அப்படி பட்ட பெண்களை மதிக்கின்ற பெரியாரை பற்றி, பெண்களை இழிவுப்படுத்தியதோடு மட்டும் அல்லாமல், பெரியாரையும் இழிவுபடுத்தி இந்த கருத்துக்களை சீமான் பதிவு செய்திருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காரணம் இதற்கு ஆதரமே கிடையாது. பெரியார் அப்படி எந்த இடத்திலும் எப்போதும் பேசியதில்லை. சீமான் போகின்ற போக்கில் பெரியார் மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இதற்கு முன்பு குடியரசு, விடுதலை நாளிதழில் ஆதாரம் வந்திருப்பதாக கூறுவது உண்மை இல்லை. அவர்கள் வாட்ஸ்ஆப்பில் பரப்பும் புகைப்படங்களில் அவர்கள் மனதிற்கு பட்ட காலத்தை போட்டுள்ளனர். அந்த வருடங்களில் குடியரசு என்பதே கிடையாது. சீமான் இல்லாத ஒன்றை பரப்புகிறார் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக தான் அவரிடம் ஆதாரங்களை கேட்கிறோம். அப்படி ஆதாரம் என்று அவர் எதையாவது காட்டினார் என்றால் ஏற்றுக்கொள்கிறோம். சீமான் போகிற போக்கில் உளறி கொட்டிச்செல்வாரே தவிர, அதற்கு அவரே பொறுப்பு ஏற்க மாட்டார். இதற்கு முன்னாடி ஒவ்வொரு சம்பவத்திலும், ஒவ்வொரு நாளிலும் மாற்றி மாற்றி பேசக்கூடியவர். நாங்கள் கேட்டால் அறிக்கையாக கொடுப்பது அல்ல. தந்தை பெரியார் குறித்து சீமான் சொல்வது உண்மையாக இருந்தால் அதற்கான ஆதாரத்தை தரட்டும். நாங்கள் நேரடியாக சென்றால் ஏன் பயப்பட வேண்டும்.

அவரை பற்றி எங்களுக்கு தெரியாதா?. ஏனென்றால் அவரை நாங்கள் தான் மேடை ஏற்றினோம். அப்போது தான் பெரியாரை பற்றி பேசினார். அப்போதெல்லாம் பெரியார் உயர்வாக தெரிந்தார். இப்போ அவர் கெட்டவராக தெரிகிறாரா? இந்த மாற்றத்திற்கு என்ன காரணம். உங்களுக்கு பின்னால் இருந்து இயக்கக் கூடியவர்களின் கருவியாக நீங்கள் இருந்துகொண்டு அவர்களுக்கு தகுந்தாற்போல் நீங்கள் இந்த கருத்துக்களை கூறுகிறீர்கள். பெரியாருடைய எதிரிகள், அவரை இன எதிரியாக பார்க்கக்கூடிய அந்த இனத்திற்கு அவர் கருவியாக செயல்படுவதால்தான் இவ்வளவு அபாண்டமான உச்சத்திற்கு சென்று அவமதிப்பு செய்துள்ளீர்கள். அதனால் இது உலக மக்களுக்கு தெரிய வேண்டும் என போராட உள்ளோம். நாங்கள் சீமான் அளவிற்கு எங்கள் இயக்கத்திற்கு விளம்பர வெளிச்சம் இல்லாததால் போராட்டம் நடத்துகிறோம். சீமானின் பின்னணியில் பார்ப்பனர்கள் உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்திற்கு அரசியல் காரணம் அல்ல. சமூக சீர்கேடுதான் காரணம். ஆண் ஆதிக்க சமூகத்தில் பெண்களை போகப் பொருளாக பார்க்கக்கூடிய எண்ணத்தை மாற்ற வேண்டும். சமூகத்தை மாற்றாமல் அரசியலாக மட்டும் பார்ப்பதில் எந்தவித பலனும் இல்லை. ஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து பெண்களை காப்பாற்ற வேண்டும் என நினைக்கும் பெரியாரை, சீமான் பெண்களை வைத்தே கொச்சைப்படுத்துவதான் வேதனையானது. அதனால் தான் சீமானின் வீட்டை முற்றுகையிடுகிறேன். கள்ளுக் கடை மறியலுக்காக மரங்களை வெட்டியதை பெரியாரே பின்னாளில் தவறு தான் என்று சொன்னார்.

நாம் தமிழர் அமைப்பில் இணையுக்கூடிய புதிய இளைஞர்கள் மீது மிகுந்த அனுதாபங்கள் தான் ஏற்படுகிறது. காரணம் அவர்கள் தமிழின விடுதலைக்காகவும், முற்போக்கான சிந்தனையோடும், போர்க்குணத்தோடும் வெறும் மேடையில் உடல்மொழியால் நடித்துக் கொண்டிருக்கும் ஒருவரை கண்டு ஏமாந்து கொண்டிருக்கினறனர். நீங்கள் எதிர்பார்க்கிற இன விடுதலையோ, முற்போக்கு தன்மையோ சீமானிடத்தில் கிடையாது. சீமானிடத்தில் போய் போய் விட்டில் பூச்சிகளை போல விழுந்து, அடுத்த நாளே மடிகிறவர்கள் தான் நாதகவின் தம்பிகள். நீங்கள் சீமானை நம்பி ஏமாற வேண்டாம். நீங்கள் இருக்க வேண்டிய இடம் பெரியாரிய இயக்கங்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ