பெரியார் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு எதிராக பேசியதை, அவர் தலித்துகள், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியதாக துக்ளக் குருமூர்த்தி அவதூறு பரப்புவதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.
பெரியார் குறித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ள அவதூறுகளுக்கு பதில் அளித்து பத்திரிகையாளர் ஜீவசாகப்தன் அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் கூறியிருப்பதாவது:- துக்ளக் விழாவில் கிட்டத்தட்ட சீமான் எங்க ஆளுதான், நாங்கள் நேரடியாக வராமல் பெரியாரை அடிக்க அடியாளாகத்தான் சீமான் செயல்படுகிறார் என குருமூர்த்தி ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துவிட்டார். மணியோசை வரும் முன்னே யானை வரும் பின்னே என்பது போல, சீமான் முதலில் பெரியார் குறித்து அவதூறுகளை பரப்பிவிட்டு செல்வார். பின்னர் அவர் ஏற்படுத்திய தளத்தில் குருமூர்த்தி அமர்ந்துகொண்டு ஆமாம் பெரியார் தலித்துக்களுக்கு எதிரி, சிறுபான்மையினருக்கு எதிரி, பிராமணருக்கு என்று கூறுகிறார். அதாவது பெரியார் தலித்துகளை எதிர்த்தாரம், இஸ்லாமியர்களை எதிர்த்தாராம், இதுதான் அவரது வேலையா? தலித்துகளுக்காகவும், சிறுபான்மை மக்களுக்காகவும்தான் பாடுபட்ட பெரியாரை அவர்களுக்கு எதிரியாக நிறுத்துகிறார் குருமூர்த்தி. பெரியார் பிராமணர்களை எதிர்த்தார் என்று சொல்லுங்கள் அதில் ஒரு நேர்மை உள்ளது. அப்படியும் அவர் தனிப்பட்ட பிராமணர்களை என்றும் எதிர்க்கவில்லை.
மகாத்மா காந்தி படுகொலையின்போது கோட்சோ ஒரு இஸ்லாமியர், நீங்கள் பொய் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டபோது, பெரியார் அவர் இஸ்லாமியர் இல்லை என்று மட்டும்தான் சொன்னார். அப்போது கூட அவர் காந்தியின் மரணத்திற்கு ஒரு பிராமணர் காரணம் என்று சொல்லவில்லை. காரணம் அதனால் பெண்கள், குழந்தைகள், அப்பாவி பிராமணர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றுதான். ஆனால் பெரியார் பார்ப்பணத்தை எதிர்த்தார். அதை தைரியமாக சொல்லுங்கள். ஆனால் ஏன் பெரியார் முஸ்லீம்களை எதித்தார் என்று சொல்லுகிறீர்கள்?. ஏன் தலித்துகளை எதிர்த்தார் என்று சொல்லுகிறீர்கள்?. இது குருமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் என்றைக்கும் பயன்படுத்தும் தந்திரமாகும். சங் பரிவார்கள் தனக்கு ஒரு ஆபத்து என்று வந்தால், அதனை இந்துக்களுக்கு ஆபத்து என்பார்கள். EWS 10 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு பிரச்சினை வந்தால் இந்துக்களுக்கு ஆபத்து என்பார்கள். ஆனால் பலன்பெறுவது எல்லாம் பார்ப்பனர்களாகதான் இருப்பார்கள். அதானிக்கு ஒரு பிரச்சினை வந்தால், இந்தியாவுக்கு ஆபத்து என்பார்கள். உண்மையில் இந்தியர்களுக்கு ஒரு பிரச்சினை என்று வந்தால் அது சீக்கியர்கள் பிரச்சினை, தமிழர்கள் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை என்று ஒதுக்கிவிடுவார்கள்.
பெரியார் கருத்தும், பார்ப்பன கருத்தும் எதிர் எதிர் திசையில் நிற்க வேண்டும். அதுதான் சரியானது. பெரியார் கடைசி வரை பார்ப்பனர்களை கடுமையாக எதிர்த்தவர். ஆனால் பெரியார் யாருக்காக கடைசி வரை பாடுபட்டாரோ, அவர்களுக்கு எதிரானவர் என்று பொய்யை பரப்பிவிடுகின்றனர். வரலாற்றில் வெட்டி ஒட்டி பேசுகின்ற கூட்டத்தினர் இவர்கள். நேற்று குருமூர்த்தியும் அதனை தான் பேசியுள்ளார். அவர் எழுதி கொடுத்த ஸ்கிரிப்டைதான் சீமானும் பேசியுள்ளார். பெரியார் இஸ்லாமியர்களை விமர்சித்தது உண்மையா? என தெரிந்துகொள்ள கொஞ்சம் வரலாறு படித்திருக்க வேண்டும், தேர்தல் வரலாறு தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவுதான். வரலாறு தெரியாதவர்களிடம் இதனை சொன்னால் அவர்கள் நம்பி விடுவார்கள். 1962 சட்டமன்ற தேர்தலில் பெரியார், காமராஜர் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். அவருக்கு எதிராக ராஜாஜியின் சுதந்திரா கட்சி, காயிதே மில்லத்தின் முஸ்லீம் லீக், தலித்துகளின் குடியரசுக்கட்சி ஆகியோர் அண்ணாவுடைய திமுகவுடன் கூட்டணி வைக்கின்றனர். காமராஜருக்கு எதிராக நின்றவர்களை, பெரியார் அவ்வாறுதான் பேசினார். இதனை அவர் மதத்திற்கு எதிராக பேசினார் என திரித்து கூறுகிறீர்கள்.

திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் இருந்தால் அதிமுக விமர்சிப்பதும், அதிமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் இருந்தால் திமுக விமர்சிப்பதும் இயல்பான ஒன்றுதான். அப்படி பேசினால் ஜெயலலிதாவோ, கலைஞரோ முஸ்லீம்கள் அழிய வேண்டும் என பேசி விட்டதாக சொல்லலாமா? இது தேர்தல் நேர பிரச்சாரத்தில் எதிர்க்கட்சி கூட்டணியை விமர்சித்து பேசுவது இயல்பானதுதான். பெரியாருக்கு வெளிப்படையாக பேசித்தான் பழக்கம். அப்படி அவர் பேசியதை வைத்து முஸ்லிம்களுக்கு எதிரி என சொல்லிவிட்டார். முஸ்லீம்கள் பற்றி பெரியார் என்ன பேசியிருக்கிறார் என்பதற்கு உங்களுக்கு எத்தனை புத்தகங்கள் ஆதாரம் வேண்டும் என்றாலும் நான் தருகிறேன். 1948லேயே முஸ்லீம்கள் தமிழர்கள் இல்லை என்றால் வேறு யார் தமிழர்கள், அவர்கள் அரேபியாவில் இருந்து வந்தவர்களா? என்று கேட்டவர் தந்தை பெரியார். இங்குள்ள பார்ப்பனர்களின் தொல்லை தாங்காமல், அந்த துயரில் இருந்து மாறி சுய மரியாதையுடன் இஸ்லாம் மத்தில் உள்ளனர் என்று பேசினார். 1948ல் பேசிய பெரியாரை, 1963 தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்சிகளை விமர்சித்து பேசியதை கோர்த்து விட்டு அவர் முஸ்லீம்களை அழிக்க சொன்னார் என்று யார் பேசுகிறார் என்றால் முஸ்லீம்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட துக்ளக் குருமூர்த்தி பேசுகிறார். தயவு செய்து இஸ்லாமிய சகோதரர்களே குருமூர்த்தி யார் என்று புரிந்துகொள்ளுங்கள்.
முஸ்லீம்கள் இந்த நாட்டின் குடிமக்களாகவே இருக்கக்கூடாது என்று சிஐஏ கொண்டுவந்த சங் பரிவார சிந்தனையில் இருந்து பேசக்கூடிய குருமூர்த்தி போன்றவர்கள், தமிழர்களுக்காக, தமிழ் மொழிக்காக, அனைத்து பிராமணர் அல்லாதோரின் உரிமைக்காக, இடஒதுக்கீட்டிற்காக கடைசி வரை போராடிய பெரியாரை எவ்வளவு தூரம் கொச்சைப்படுத்துகிறார்கள் என்று பாருங்கள். இவர்கள் பக்கம் கல் வராமல் இருப்பதற்காக செய்யும் தந்திரம் இது. ஏனென்னால் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகளின் எண்ணிக்கை அதிகம். இவர்களை முன்னால் நிறுத்திக்கொண்டு பிராமணர்கள் பின்னால் நின்றுகொண்டு பெரியாரை அடிங்கள் என்கின்றனர். குருமூர்த்தி முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகளுக்கு பெரியார் எதிரி என்று கட்டமைப்பதன் மூலம் அவரை பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு ஆதரவாளராக காட்ட முயற்சிக்கின்றார். அவர்களுக்காக மட்டும்தான் பெரியார் செய்தார் என்று இவர்களிடம் காட்டுவார்கள். ஆனால் மறுபுறம் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரிடம் சென்று நீங்கள் ஆண்ட பரம்பரை, நீங்கள் ஒரு சத்திரியர், நீங்கள் இடஒதுக்கீடு பெறக்கூடிய இடத்திலேயா இருக்கிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு எதிராக பெரியாரை கட்டமைத்து அவரை இழிவு படுத்துவார்கள். 50 வருடங்களுக்கு முன்னால் இடைநிலை சாதி சங்கங்களின் மாநாட்டில் சென்று அவர்கள் படிக்க வேண்டும் என பெரியார் பேசினார். ஆனால் இன்று ஆர்எஸ்எஸ் சங் பரிவார் எல்லாம் அவர்களின் மாநாட்டிற்கு சென்று நீங்கள் ஆண்ட பரம்பரை என்று சொல்லி, இடஒதுக்கீட்டில் இருந்து வெளியே வாங்கள் என்று சொல்கிறார்கள். 3 சதவீத பார்ப்பனர்கள் தங்களை தற்காத்து கொள்வதற்காக 97 சதவீத மக்களை நிரந்தர அடிமைகளாக வைத்துக் கொள்வதற்காக அவர்களுக்காக பாடுபட்ட தலைவரை, அவர்களை 97 சதவீதத்துக்கு எதிரி என்று கட்டமைக்க மேற்கொள்ளும் பொய் பிரச்சாரம்.
பெரியார் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகளை பார்த்து பேசியதை வைத்துக்கொண்டு பேசும் குருமூர்த்தி, அவர் தலித்துகள் இனஇழிவு நீங்க இஸ்லாம் மதத்திற்கு மாறுங்கள் என்று சொன்னதற்கு என்ன பதில் அளிப்பார்?. பெரியார் அண்ணாவை, கலைஞரை, கம்யூனிஸ்டுகளை திட்டியுள்ளார். இவர்களுடன் கூட்டணியும் வைத்துள்ளார். ஆனால் அவர்கள் எல்லாம் பெரியாரை அழைத்து தங்கள் வீட்டு திருமணம் அவர் தலைமையில் தான் நடைபெற வேண்டும் என எண்ணினர். ஏனென்றால் பெரியாரின் விமர்சனத்திற்கு பின்னால் வன்மம் இல்லை என்பது அவர்களுக்கு தெரியும். இன்று குருமூர்த்தி போன்ற ஆட்கள் பொறுப்பின்றி சீமானை தூண்டிவிட்டு பெரியார் தலித்துகளுக்கு எதிரி என கூறுகின்றனர். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அப்படி கூறுகிறீர்கள். ராஜாஜியின் சுதந்திரா கட்சியில் இருந்த முனுசாமிப்பிள்ளை பெரியாருக்கு எதிராகத்தான் பேசுவார். அம்பேத்கர், தன் வாழ்நாள் முழுவதும் பெரியாரை விட்டுக்கொடுத்தது இல்லை. பூனா ஒப்பந்தத்தின்போது கூட பெரியார் மட்டும்தான் அம்பேத்கருடன் நின்றார். பெரியாரை எதிர்த்து பேசியதாக மேற்கோள் காட்டப்படும் தலித் தலைவர்கள் யார் எனறால், அவர்கள் அம்பேத்கருக்கும் எதிராக பேசியவர்கள் தான். 1963ல் பெரியார் தலித்துகளை அல்ல, தலித் கட்சியான குடியரசுக்கட்சியை தான் விமர்சனம் செய்தார். ஏன் அப்போது திமுகவையும் தான் பெரியார் எதிர்த்தார். அப்படி என்றால் திமுகவின் எதிரி பெரியார் என்று உங்களால் சொல்ல முடியுமா?
பெரியார் தாயுடன் உறவு கொள்ள சொன்னார் என்று அவர்கள் சொன்னார்கள் இதுவரை ஆதாரத்தை காட்டவில்லை. அது புராண கதையை வைத்து பெரியார் பேசினார் என்று ஆதாரத்துடன் சொன்னதையும் அவர்கள் மறுக்கவில்லை. அடுத்த புரளி பெரியார் முஸ்லீம்களை அழிக்க சொன்னார் என்று. தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதை வைத்து எல்லாம் நீங்கள் ஒரு விஷயத்தை கணக்கிட முடியாது. அதே பெரியார் 1967 தேர்தலில் அண்ணா வெற்றி பெற்ற உடன் அண்ணா ஆதரவாளராக மாறிவிட்டாரே?. 1971ல் அவர் காமராஜரை ஆதரிக்கவில்லை. திமுகவை தான் ஆதரித்தார். அப்போ காமராஜரின் எதிரிதான் பெரியார் என்று சொல்வீர்களா? பெரியார் காங்கிரசை கடுமையாக எதிர்த்தார். ஆனால் காங்கிரஸ் முதலமைச்சர் ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார், ஆசிரமத்தில் சாதி பாகுபாடு காட்டப்படும்போது பெரியாரிடம்தான் அவர் வந்தார். காந்தியை கடுமையாக எதிர்த்தவர் பெரியார். ஆனால் அவர் மறைவின்போது காந்தி நாடு என பெயர் வைக்க சொன்னவர் பெரியார். அதனால் வார்த்தைகளை வெட்டி ஒட்டி, அன்றைய கால சூழல்களை புரிந்துகொள்ளாமல் பெரியார் என்ன சொன்னார் என்பதை புரிந்துகொள்ளாமல் அதை அவதூறாக பேசினால் என்ன அர்த்தம்.
முதலில் இன்றைய காலகட்டத்தில் முஸ்லீம்கள் குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன? முஸ்லீம்களை, சீமான் சைத்தான் என்கிறார். ஆர்எஸ்எஸ் – பாஜக, முஸ்லீம்களை இந்த நாட்டின் குடிமக்களாக ஏற்றுக்கொள்கிறீர்களா?. முஸ்லிம் அடையாளங்களை அழிக்க முயற்சிக்கின்றீர்கள். நீங்கள் வந்து முஸ்லீம்கள் பக்கம் நின்று பெரியார் மீது கல் எறிவீர்கள், அதை முஸ்லிம்கள் நம்புவார்கள். மாட்டிறைச்சி உண்டால் தலித் மக்களை கொன்ற வடஇந்திய சங்பரிவார் கும்பலின் பிரதிநிதியாக உள்ள நீங்கள், தலித்துகளுக்கு பெரியார் எதிரி என்கிறீர்கள். பொதுக்குளத்தில் தான் தலித்துகள் தண்ணீர் எடுக்க வேண்டும், அவர்களுக்கு தனிக்குளம் இருக்கக்கூடாது என்று காங்கிரசில் இருந்தபோது காந்திக்கே லெட்டர் போட்டவர் பெரியார். இவர் தலித்துகளுக்கு எதிரியாம். ஆனால் சனாதன அடிப்படையில் இன்றும் அனைவரும் இருக்க வேண்டும். குடியரசுத் தலைவரே ஆனாலும் கோவிலுக்குள் வரக்கூடாது என்று சொல்லும் பாஜகவினர் தலித்துகளின் நண்பராம். இதற்கு சீமான், பார்ப்பன பத்திரிகைகள் போன்றோர் ஆதரவு தெரிவிப்பார்கள். பெரியார் தலித்துகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பற்றி அவர் பேசியது, எழுதியது இன்றும் ஆதரத்தோடு உள்ளது. ஒருவேலை பெரியார் திட்டி இருந்தால் அது அவர்களது கல்வி, வேலைவாய்ப்பு, உரிமைகளுக்காகதான் பேசி இருப்பார். தேர்தல் பிரச்சார பேச்சை வைத்துக்கொண்டு அவர் முஸ்லிம்கள், தலித்துகளுக்கு எதிராக இருந்தார் என பேசுவது அவதூறாகும்.
ஏற்கனவே பெரியார் அசிங்கமாக பேசினார் என்றனர். தற்போது இந்த அவதூறை பரப்பி உள்ளனர். குருமுர்த்தி போன்றோர் தூண்டி விடுவதை சீமான் போன்றோர் பேசுவதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக புரிந்துகொள்வார்கள். இவர்கள் யார் என்ன நோக்கத்திற்காக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது. தனித்தனியாக நிற்பதுபோல தோன்றினாலும், திராவிடத்தை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றைக் கருத்தியலில் இவர்கள் எல்லாம் உள்ளனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.