Homeசெய்திகள்உலகம்இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமல்... ஹமாஸ் வசமிருந்த 3 இஸ்ரேலிய பணய...

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமல்… ஹமாஸ் வசமிருந்த 3 இஸ்ரேலிய பணய கைதிகள் விடுவிப்பு!   

-

- Advertisement -

ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக வைத்திருந்த 3 இஸ்ரேலிய பெண்கள் 471 நாட்களுக்கு பின்னர் இஸ்ரேல் வசம் ஒப்படைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்தது. போரை நிறுத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட சமரச பேச்சுவார்த்தை காரணமாக காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ள ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டன. போர் நிறுத்தம் 3 கட்டங்களாக அமல் படுத்தப்படும் என்றும், போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.

இந்த போர் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு அமலுக்கு வரவிருந்தது. போர் நிறுத்தத்தின் முதல் நாளில் இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள  90 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். இஸ்ரேல் விடுவிக்கப்படுபவர்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில், ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டிய இஸ்ரேலிய பணய கைதிகளின் விவரங்கள் பிற்பகல் 2 மணிவரை அறிவிக்கவில்லை. இதனால் இஸ்ரேலிய படைகள் காசாவில் அதிரடி தாக்குதல் நடத்தி 108 பேரை கொன்றது.

இந்நிலையில் சுமார் 2 மணிநேர தாமதத்திற்குபின் விடுதலை செய்யப்பட உள்ள இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ்  வெளியிட்டுள்ளது. அதன்படி, பணய கைதிகளான ரோமி கொனின் (24), ஏமி டமாரி (28), டோரன் ஸ்டான்பிரிசர் (31) ஆகிய 3 பேரை விடுதலை செய்வதாக ஹமாஸ் அறிவித்ததை அடுத்து, பிற்பகல் 2.45 மணி முதல்  போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல்  அறிவித்தது.

இதனை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினர் 3 பணய கைதிகளையும் கார் மூலம் அழைத்து வந்து, செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர். அப்போது ஹமாஸ் இயக்கத்தினர் திரண்டு ஹமாஸ் என முழக்கங்களை எழுப்பினர். இந்நிகழ்வை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் ராட்சத திரையில் பல்லாயிரக்கணக்கானோர் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து, விடுவிக்கப்பட்ட 3 பணய கைதிகளும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலாக 19 பதின் பருவத்தினர் உள்பட 90 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்தது.

MUST READ