மதகஜராஜா திரைப்படம் ரூ. 50 கோடி வசூலை நெருங்குவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக விஷால் நடிப்பில் உருவான திரைப்படம் தான் மதகஜராஜா. இந்த படத்தை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரிக்க சுந்தர். சி இந்த படத்தை இயக்கியிருந்தார். இதில் விஷால் தவிர சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா மற்றும் பலர் நடித்திருந்தனர். காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகி 2025 ஆம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அந்த அளவிற்கு இந்த படத்தில் காமெடிகள் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகி இருப்பதோடு ரசிகர்களையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. அதிலும் சந்தானம் வழக்கம் போல் ஒரு காமெடியனாக மிரட்டியுள்ளார். மேலும் நடிகர் மனோபாலா இந்த படத்தில் பிணமாக எந்த ஒரு வசனமும் இல்லாமல் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த படம் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படம் வெளியான 8 நாட்களில் ரூபாய் 45 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தற்போதைய தகவல் தெரிவிக்கின்றன. இன்னும் சில நாட்களில் இந்த படம் 50 கோடி ரூபாயை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.