கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் ரவி தமிழ் சினிமாவில் ஜெயம், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன் என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இருப்பினும் சமீப காலமாக ரவி நடிப்பில் வெளியாகும் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இவரது நடிப்பில் கடைசியாக காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் ரவி, சிவகார்த்திகேயனின் 25வது படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் தனது 34 வது படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். அதன்படி இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி படப்பிடிப்புகளும் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த படத்தில் ரவியுடன் இணைந்து தவ்தி ஜிவால், பிரதீப் ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஹாரிஸ் ஜெயராஜுக்கு பதிலாக சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கனவே JR 34 (ஜெயம் ரவி 34) என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு தற்போது RM 34 (ரவி மோகன் 34) என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசர் நாளை (ஜனவரி 29) காலை 11 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.