Homeசெய்திகள்அரசியல்மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு முறையை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் – செல்வப்பெருந்தகை கண்டனம்

மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு முறையை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் – செல்வப்பெருந்தகை கண்டனம்

-

- Advertisement -

மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு என்ற முறையை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தனது X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு முறையை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் – செல்வப்பெருந்தகை கண்டனம்முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களில், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள்ஒதுக்கீடு, சில மாநிலங்களில் வழங்கப்படுகிறது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்குவது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உத்தரவிட்டது. இதை எதிர்த்து, 2019ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றமும் முதுநிலை படிப்புகளில், வசிப்பிடத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று நேற்று (30.01.2025) தீர்ப்பளித்திருக்கிறது. இந்த தீர்ப்பு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவ கட்டமைப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் MD, MS, DM, MCH போன்ற படிப்புகளுக்கான சேர்க்கை அதிகமாக உள்ளது. கடந்த 2022 ஆண்டு மார்ச் 17 அன்று உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பின்படி, கிராமப்புற மருத்துவ சேவையைப் பெருக்க, அந்தப் பகுதிகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதுகலை படிப்புகளுக்கான இடங்கள் 2294 இருக்கின்றன. அந்தவகையில் தமிழகத்தில் சிறுபான்மையினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களும் இந்த தீர்ப்பால் முழுமையாக பாதிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். மருத்துவ மேற்படிப்புகளில் கிட்டத்தட்ட 2,200-க்கும் மேற்பட்ட இடங்கள் தமிழக அரசின் வசம் இருக்கிறது. மேலும், 1,200 முதுநிலை மருத்துவ இடங்களும் பறிபோகும் அபாயம் உள்ளது.

அதேபோல், கிராமப்புறங்களிலும், சிரமமான மலைப்பகுதிகளிலும் கடினமான இடங்களிலும் மற்றும் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் இந்த தீர்ப்பால் அவர்களின் கனவு தகர்ந்து விடும்.

வசிப்பிட அடிப்படையிலான இடஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் இதற்காக வலுவான வாதங்கள் முன்வைக்கப்படுவதை தமிழ்நாடு அரசும், மருத்துவர்கள் அமைப்புகளும் உறுதி செய்ய வேண்டும். மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு என்ற முறையை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

MUST READ