நடிகை பூஜா ஹெக்டே, தளபதி விஜய் குறித்து பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் வலம் வருபவர். இவரது நடிப்பில் கடைசியாக கோட் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது ஜனநாயகன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹெச். வினோத் இந்த படத்தை இயக்குகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அரசியல் தொடர்பான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பாபி தியோல், நரேன், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் பலர் நடிக்கின்றனர். அதேசமயம் நடிகை பூஜா ஹெக்டேவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இவர் விஜய் உடன் இணைந்து பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, விஜய் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “விஜயை திரையில் பார்க்க விரும்பும் ஒரு நபராக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் அதே சமயம் அவருடைய பயணத்தை நானும் ஆதரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.