தங்கலான் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் கூடுதல் காட்சிகளுடன் திரையிடப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான படம் தான் தங்கலான். இந்த படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கியிருந்தார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. கோலார் தங்க சுரங்கத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் நடித்த விக்ரம், பார்வதி ஆகியோரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் சரிவை சந்தித்தது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 1) இந்த படம் ஐரோப்பா நாடுகளில் நடைபெறும் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் ஒன்றான ரோட்டார்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வாகி உள்ளது. அதாவது திரையரங்குகளில் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் திரையிடப்பட்ட இப்படம் தற்போது கூடுதல் காட்சிகளுடன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு தங்கலான் படத்திற்கு சர்வதேச விருது கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.