Homeசெய்திகள்விளையாட்டுஜூனியர் மகளிர் டி-20 உலகக்கோப்பை: இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்!

ஜூனியர் மகளிர் டி-20 உலகக்கோப்பை: இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்!

-

- Advertisement -

ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஐசிசியின் 2-வது ஜூனியர் மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் மலேசியாவில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டியில்  நிக்கி பிரசாத் தலைமையிலான இந்திய, தென்னாப்பிரிக்க அணியுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மீகே வான்ஊர்ஸ்ட் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குறிப்பாக அந்த அணியின் 4 வீராங்கனைகள் ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். இந்திய தரப்பில் கொங்காடி திரிஷா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 8 ரன்கள் எடுத்திருந்தபோது தொடக்க வீராங்கனை கமலினி, தென்னாப்பிரிக்காவின் கைலா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடக்க வீராங்கனையாக கமிறங்கிய கொங்காடி திரிஷா மற்றும் சனிகா சால்கே இணை அதிரடியாக விளையாடி வெற்றியை நோக்கி அணியை அழைத்துச்சென்றனர். 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 84 ரன்கள் எடுத்த இந்திய அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஜுனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையை 2வது முறையாக வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

MUST READ