திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள புகழ் வெளிச்சம் கொண்ட கடைசி கட்சித்தலைவர் விஜய்தான் என்றும், இனி எந்த நடிகர் கட்சி ஆரம்பித்தாலும், இங்கே எடுபடாது என்று திரைப்பட விமர்சகர் புளு சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜயின் அரசியல் வருகை தொடர்பாக திரைப்பட விமர்சகர் புளு சட்டை மாறன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: பாபா & சர்கார் க்ளைமாக்ஸ்: ரஜினி, விஜய் இருவரும் அரசியலுக்கு வருவார்களா எனும் எதிர்பார்ப்பை கிளப்பிய படங்கள் இவை. முக்கியமாக க்ளைமாக்ஸில் இவர்கள் முதல்வராக பதவி ஏற்கும் காட்சி வருமா எனும் கேள்வியை நோக்கி இப்படங்களின் இதர காட்சிகள் நகர்ந்தன. பாபாவில்.. நான் உங்கள் தலைவருமில்வை. முதல்வருமில்லை எனும் ரீதியில்.. ஒரு பெரியவரை கைகாட்டி அவரை தலைவராக ஏற்கும்படி கூறுவார். நல்லக்கண்ணு அவர்களைத்தான் அப்படி குறிப்பிட்டார் என அப்போது பேசப்பட்டது.
சர்கார் க்ளைமாக்ஸிலும் இதை போலத்தான் கூறினார் விஜய். உங்களுக்கான நல்ல தலைவரை நீங்களே தேர்வு செய்துகொள்ளுங்கள் என்றார். அது வெறும் சினிமா சீன் இல்லை. விஜய்யின் யதார்த்த மனநிலை. கட்சி ஆரம்பித்து.. ஆளுங்கட்சியை விமர்சிப்பது, எப்போதாவது ஒரு போராட்டம் நடத்துவது போன்றவை சுலபம். ஆனால் தேர்தலில் வெல்வது கடினம். வென்ற பிறகு ஆட்சி நடத்துவது மிகக்கடினம் என்பது விஜய்க்கு சர்கார் பட காலத்திலேயே நன்கு தெரியும். அதனால்தான் அப்படி ஒரு க்ளைமாக்ஸ்.
தற்போதைய CCTV, Mobile, Social Media உலகில்.. ஆளும் கட்சியினர் குறைகளை, தவறுகளை லேசில் மறைத்துவிட முடியாது. இதற்கு உதாரணம் தற்போதைய திமுக ஆட்சி. 2026 தேர்தலில் வெற்றிபெற்றால் விஜய் முதல்வர் ஆவாரா? அல்லது சர்கார் பட க்ளைமாக்ஸ் போல.. திருமா போன்ற இன்னொரு தலைவரிடம் முதல்வர் பதவியை ஒப்படைப்பாரா? எனும் கேள்வி எழுவது இயற்கை. ஒருவேளை தோற்றால்.. அரசியலுக்கு முழுக்கு போட்டு… ரஜினி போல மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்புண்டு.
தோற்றபிறகு.. தொடர்ந்து ஆளும் கட்சியை விமர்சித்து காலத்தை நகர்த்த விரும்ப மாட்டார் என்றே தெரிகிறது. எத்தனை ஆண்டுகள் இப்படி செய்ய இயலும்? தற்போது அவருக்கு 50 வயதுதான் ஆகிறது. வியாபாரம், வசூலில் முதல் இடத்தில் உள்ளார். இன்னும் 20 ஆண்டுகளாவது நடிக்க இயலும். ஒருவேளை அதிமுக, தவெக கூட்டணி அமைந்து.. அக்கூட்டணி வென்று..அதில் அதிமுகவை விட குறைவான தொகுதிகளில் தவெக வென்றால்.. கமல் பாணியில் அரசியல், சினிமா என இரண்டிலும் பயணிக்கலாம்.
திமுக, அதிமுகவிற்கு மாற்றாக ஒரு நேர்மையான ஆட்சி தேவை என்பது கட்சி சாராத தமிழர்களின் பல வருட கனவு. தேமுதிக, மக்கள் நல கூட்டணி, ரஜினி, கமல் என பலர் முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை. அதற்கு காரணம் மக்கள் அல்ல. இவர்கள் செய்த காமடிகள்தான். திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள புகழ் வெளிச்சம் கொண்ட கடைசி கட்சித்தலைவர் விஜய்தான். இனி எந்த நடிகர் கட்சி ஆரம்பித்தாலும்.. இங்கே பருப்பு வேகாது. விஜய் முதல்வர் ஆவாரா? எதிர்க்கட்சி வரிசையில் இருப்பாரா? அரசியலை துறந்து சினிமாவிற்கு திரும்புவாரா? 2026 பதில் சொல்லும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.