திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 10-ஆம் வகுப்பு மாணவன் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு பகுதியை சேர்ந்தவர் ஜோதி. இவர் தமது சகோதரியின் மகனான 10ஆம் வகுப்பு மாணவர் விமல்(14) உடன் வில்லிவாக்கத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வல்லூர் சந்திப்பில் சென்றபோது, ஜோதியின் இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு சென்ற டிப்பர் லாரி மோதி விபத்திற்குள்ளானது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஜோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த விமலை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மீஞ்சூர் ஆரம்ப நிலையத்தில் அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, செங்குன்றம் போக்குவரத்து காவல்துறையினர் இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, டிப்பர் லாரி ஓட்டுநரான திருவண்ணாமலையை சேர்ந்த ஹரிபிரசாத் என்பவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.