தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் விதிமீறல் வெளிப்படுத்தியதால் தனது உயிரைப் பறிக்க சதி நடந்ததாக தமிழகப் பெண் ஏடிஜிபி அதிகாரி
புகார் அளிக்கப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடந்த ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாகவும் தற்போது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஏடிஜிபியாக பணிபுரிந்து வரும் கல்பனா நாயக் தன்னை கொல்ல சதித்திட்டம் நடந்திருக்குமோ என்ற அடிப்படையில் புகார் அளித்திருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக கல்பனா நாயக் இருந்தபோது ஜூலை மாதம் 29ஆம் தேதி திடீரென எழும்பூர் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் குறிப்பாக ஏடிஜிபி அறையில் தீ விபத்து நடந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். முதற்கட்டமாக ஏசி மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தீ விபத்து நடந்த நிலையில் அறையில் ஏடிஜிபி கல்பனா நாயக் இல்லை.
இந்த நிலையில் தான் தீ விபத்து நடந்த 15 நாட்களுக்குப் பிறகு விடுப்பில் சென்றிருந்த ஏடிஜிபி கல்பனா நாயக் தமிழக டிஜிபி, உள்துறைச் செயலர் மற்றும் தலைமைச் செயலருக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனது அலுவலகத்தில் நடந்த தீ விபத்து என்பது தன்னை கொல்ல நிகழ்த்தப்பட்ட நாடகம் அல்லது சதி என பரபரப்பு குற்றச்சாட்டை புகாரில் தெரிவித்துள்ளார். குறிப்பாக அந்த புகாரில் பாரபட்சம் இன்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உதவி ஆய்வாளர் தேர்வில் பட்டியலில் இடஒதுக்கீடு செய்வதில் முரண்பாடு இருப்பதாக தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபி விதிமீறல்கள் தொடர்பாக சுட்டி காட்டப்பட்டதாகவும், இதன் காரணமாக தன்னுடைய உயிருக்கு ஆபத்தாக மாறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்க சொத்துக்களும் சேதமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார் . தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக இருந்தபோது உதவி ஆய்வாளர் தேர்வில் இட ஒதுக்கீட்டில் நடந்த முரண்பாடுகளை சுட்டிக் காட்டியதை, கடந்த ஆண்டு மார்ச் மாதம் புறக்கணிக்கப்பட்டதாகவும் கல்பனா நாயக் குற்றம் சாட்டியுள்ளார். பினனர் இந்த விவகாரம் தொடர்பாக சப் கமிட்டி அமைக்கப்பட்டு முரண்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து உயர் நீதிமன்றமானது தொடர்புடைய அதிகாரிகள் தேர்வு பட்டியலில் உள்ள குறைகளை சரி செய்து வெளியிடுமாறு தெரிவித்தது.
இந்த நிலையில் தான் ஜூலை 29ஆம் தேதி சென்னை எழும்பூர் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கும் பொழுது மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் மூலமாக அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளார். அதில் தன்னுடைய அறையில் தீ விபத்து நடந்திருப்பதாகவும், இதனால் அலுவலகம் வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் தனது அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். தனது இருக்கை முழுவதுமாக எரிந்து கிடந்ததாகவும் சிறிது நேரத்திற்கு முன்பு வந்திருந்தால் என்னுடைய உயிரை இழந்திருக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீ விபத்து என்பது தான் சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வுகளில் முரண்பாடுகளை ,விதிமீறல்களை சுட்டிக் காட்டியதன் காரணமாக தொடர்ச்சியாக நடந்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக முந்தைய ஆண்டுகளில் நடந்த முறைகேடுகளையும் தெரிவித்ததால் தனது உயிருக்கு ஆபத்தாக மாறியதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தீ விபத்து நிகழ்ந்த தினத்தின்போது இறுதிப் பட்டியலை ஆய்வு செய்து குறைகளை நீக்கி திருத்தப்பட்ட பட்டியல் தயார் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த தீ விபத்து நிகழ்ந்து 15 நாட்கள் ஆகியும் சம்பந்தப்பட்ட அலுவலக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் கல்பனா நாயக், தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி, விடுப்பை முடித்துவிட்டு புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார். தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சென்னை காவல் ஆணையருக்கும் இந்த புகார் அளிக்கப்பட்டதாக கல்பனா நாயக் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த தீ விபத்து ஏதோ நாடகம் நடந்திருப்பதாகவும், சதி வேலை நடந்து இருப்பதாகவும் சந்தேகததை புகாரில் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் ஏடிஜிபி கல்பனா நாயக் தீ விபத்து நடந்த பிறகு திருத்தப்பட்ட பட்டியல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல் ஆய்வு செய்யப்படாமல் வெளியிடப்பட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தீ விபத்து தொடர்பாக உடனடியாக விசாரணையும் நடைபெறவில்லை என குறிப்பிட்டுள்ளார். தனது சொந்த தலைமை அலுவலகத்திலேயே ஒரு மூத்த உயர் அதிகாரியின் பாதுகாப்பு உத்தரவாதம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும், பல அதிகாரிகள் சுற்றி இருந்தும் பாதுகாப்பு இல்லை என தெரிவித்துள்ளார். 6 மாதங்கள் ஆகியும் இதுவரை முறையான விசாரணை புகார் தொடர்பாக நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்
ஏடிஜிபி கல்பனா நாயக்கை கொல்ல சதி நடந்ததா? என்பது குறித்து சென்னை காவல் துறை விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஏசி மின் கசிவு காரணமாக விபத்து நடந்ததாக தீயணைப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், பெண் உயர் அதிகாரி புகார் அளித்துள்ளதால் விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது. சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த இடஒதுக்கீடு தொடர்பான முரண்பாட்டை வெளிப்படுத்தியதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் சதி நடந்துள்ளது என்ற சந்தேகம் எழுப்பும் வகையில் பெண் ஏடிஜிபி கல்பனா நாயக் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது