பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணியாக புறப்பட்டு மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு சென்றடைந்தனர். இந்த பேரணியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள், மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பிர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.
பின்னர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த நிர்வாகிகள் அண்ணா நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினர். முன்னதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.