சென்னையில் தனியார் நிறுவன ஊழியரை கடத்தி ரூ.20 லட்சம் பணம் பறித்த வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் முகமது கவுஸ் என்பவரை கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி கடத்தி ரூ.20 லட்சத்தை பறித்ததாக திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங், வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி 4 பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு இன்று நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் 4 பேரும் இந்த வழக்கில் கைதாகி 47 நாட்களாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் வருமான வரித்துறை ஊழியர்கள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும் வழிப்பறி செய்யப்பட்ட பணத்தை உடனடியாக விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.