பொள்ளாச்சி அருகே மகளிர் சுய உதவி குழுவில் பணம் வாங்கித் தருவதாக கூறி பெண்ணை கடத்திச் சென்று நகைகளை திருடிய தோழிகள் கைது!
உடுமலைப்பேட்டை சாமராயபட்டி பகுதியில் பெண் ஒருவர் மயக்க நிலையில் இருந்ததாக தெரிகிறது. அவரை பார்த்த அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிற்கு நினைவு திரும்பியதும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (56). இவர் கூலி வேலை செய்து வருகிறார். ஆனைமலையில் சாந்தி வசிக்கும் அதே காம்பவுண்டில் வசித்து வருபவர் லோகநாயகி (43). லோகநாயகியும் அவரது தோழியுமான மகேஸ்வரி (40) ஆகிய இருவரும் சாந்திக்கு மகளிர் சுய உதவிக் குழுவில் பணம் வாங்கித் தருவதாக கூறி ஆட்டோவில் கூட்டிச் சென்றதாக தெரிகிறது.
பின்பு ஆனைமலை பகுதியில் உள்ள மருந்து கடையில் 10 தூக்க மாத்திரைகளை வாங்கி அதனை நா.மு சுங்கம் பகுதியில் உள்ள பேக்கரியில் வைத்து குளிர்பானத்தில் கலந்து சாந்திக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்பு மயக்க நிலையில் இருந்த சாந்தியை மற்றொரு ஆட்டோவில் ஏற்றி தோழிகள் இருவரும் உடுமலைப்பேட்டை நோக்கி சென்றதாக தெரிகிறது.
பின்பு உடுமலைப்பேட்டை பகுதியில், சாமராய பட்டி அருகே உள்ள கிணற்று மேட்டில் வைத்து சாந்தி அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலி, ஒரு பவுன் கம்மல், அரை சவரன் தாலி உட்பட 4.5 சவரன் தங்க நகைகளை மகேஸ்வரி மற்றும் லோகநாயகி ஆகிய இருவரும் திருடிவிட்டு சாந்தியை கிணற்று மேட்டிலேயே மயக்க நிலையில் விட்டு சென்றதாக தெரிகிறது.
இதுகுறித்து சாந்தி கொடுத்த புகாரின் பேரில் ஆனைமலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மகேஸ்வரி, லோகநாயகி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.