ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதை கண்டித்து ஆவடியில் வரும் பிப்ரவரி 08 ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதான், தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லை. தமிழகத்தின் சார்பில் எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தும், அதில் ஒன்றைக்கூட உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை ஒன்றிய அரசுக்கு.
தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும் மொழியையும் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டும். பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் உள்ள அந்த மாநிலத்துக்கு மட்டும்தான் திட்டங்களும், நிதியும் அறிவிக்கப்படுகிறது என்றால் ‘ஒன்றிய’ நிதிநிலை அறிக்கை என இதனை அழைக்க வேண்டிய அவசியமே இல்லை.
இந்த நிலையில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திமுக தலைமை கழகம் நேற்று அறிவிப்பை வெளியிட்டது. ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வையும், தமிழ்நாட்டின் முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்படுவதையும், தமிழ்நாடு முதல்வர்-மு.க.ஸ்டாலினின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகும், எஸ்.எஸ்.ஏ. பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்காததையும், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காமல் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசினைக் கண்டித்து வருகிற பிப்ரவரி 8ம் தேதி சனிக்கிழமை மாலை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் திமுக சார்பில் ‘‘கண்டன பொதுக்கூட்டம்” நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆவடியில் நடைபெறவுள்ள கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.