ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் ஆளுநர் ஆர்.என்.ரவி தாமதம் செய்வதாகவும், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் அவர் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு கடந்த 4ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுடன் பேசி முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மேலும் இருதரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு எழுத்து பூர்வமான வாக்குதங்களை நேற்று தாக்கல் செய்தது.
இந்த நிலையில், ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் முதல் வழக்காக விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, பல்கலைகழக மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத விவகாரம் குறித்த வாதங்களை முன்வைக்கிறார். தொடர்ந்து, ஆளுநர் சார்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமணி வாதிடுகிறார். வாதங்கள் நிறைவு இன்றே வழக்கில் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.