மணப்பாறை அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டாவது நாளாக பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பழையபாளையைத்தில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி என இரண்டு பள்ளிகள் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த நாகராஜன் ( 52 ) என்பவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரையடுத்து மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸார் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
தலைமை ஆசிரியர் நாகராஜன் இதே ஊரில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி பெற்றோராகளின் நன்மதிப்பை பெற்றவர் என்றும் அவர் எவ்வித தவறும் செய்திருக்க மாட்டார் என்று கூறி பழையபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் உயர் நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிக்கு மாணவர்களை அனுப்பாமல் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தலைமை ஆசிரியரை விடுவித்தால் மட்டுமே பள்ளிக்கு அனுப்புவோம் என்று கூறி இன்றும் இரண்டாவது நாளாக பள்ளிக்கு குழந்தைகள் அனுப்பவில்லை. இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரேவதி பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் போராட்டத்தால் இரண்டு பள்ளிகளில் தலா ஒரு மாணவி வீதம் இரண்டுபேர் மட்டுமே பள்ளிக்கு வந்துள்ளனர். மீதமுள்ள 162 மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர்.