Homeசெய்திகள்கட்டுரைசீமானை கொண்டுவந்தது எதற்காக? வெகுண்டெழுந்த ஜெகத் காஸ்பர்!

சீமானை கொண்டுவந்தது எதற்காக? வெகுண்டெழுந்த ஜெகத் காஸ்பர்!

-

- Advertisement -

ஒரு இனத்தினுடைய அழிவை தன்னுடைய சுய அரசியலுக்காக தொடங்கிய ஒரு இயக்கம்தான் நாம் தமிழர் என்ற கட்சி என்று தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் பாதிரியார் ஜெகத் காஸ்பர்  குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை தமிழர்களை பெயரை வைத்து சீமான் செய்யும் அரசியல் குறித்தும், நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் ஜெகத் காஸ்பர் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-  ஒரு புகைப்படத்தை வைத்து, உணவு சாப்பிட்டாரா இல்லையா? என்பதை வைத்து மிக மிக சிறுமையான விவாதத்தை முன்வைக்க விரும்பவில்லை. அடிப்படையில் சீமான் என்பவர் ஈழ விடுதலைக்கு யார்? அவர் எந்த காலச் சூழலில் எதற்காக கொண்டுவரப்பட்டார். இவைதான் அடிப்படையான கேள்விகள். சீமான், தமிழக களத்தில் ஈழ விடுதலை தறித்துக் கொண்டுவந்து நின்ற காரணத்தால் ஈழ விடுதலை என்ற கருத்தியலுக்கும், இவ்வளவு தியாகங்கள் செய்தது கவுரவமான அரசியல் தீர்வுக்காகதான். அதற்கெல்லாம் என்ன நடைபெற்றது என்பதுதான் முக்கியமாக விவாதிக்கப்படும். சீமானை கடந்த ஒரு தமிழ் தேசியம் இங்கே கட்டமைக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. பலர் சென்றார்கள், புகைப்படம் எடுத்தார்கள். இவரும் சென்றிருக்கலாம். எடுத்திருக்கலாம். பலர் சென்றார்கள் அவர்களுக்கு தமிழ் விருந்தோம்பல் என்ற பெயரில் உணவு பரிமாறப்பட்டது. இவருக்கும் உணவு பரிமாறப்பட்டிருக்கலாம். அவற்றோடு விவாதம் செய்ய நான் வரவில்லை.

ஆனால் ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் 1983 கலவரங்கள், அதற்கு முந்தைய கலவரங்கள், அதன் பின்னர் தமிழகம் வந்தது. தன்னெழுச்சியாக தமிழக மக்கள் அவர்களை வரவேற்று, தங்கள் இல்லங்களில் ஏற்றது. அரசிய ரீதியாக அவர்களுக்காக களத்தை திமுக – அதிமுக அனைத்து அரசியல் கட்சிகளும் உருவாக்கிய காலகட்டம். 1983 காலகட்டம். அந்த காலகட்டத்தில் ஒரு மாணவராகவோ, இளைஞராகவோ இவர் என்ன பங்களிப்பு செய்தார்? எங்கு இருந்தார்? ஏதேனும் பங்களிப்பு செய்தாரா? அதற்கு பின்னர் ஈழ தமிழ் மக்களினுடைய ஒரு சமூகமாக பயணத்தில் 1995 அக்டோபர் மாதம் ஏறக்குறைய 7 லட்சம் மக்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு  வன்னி பகுதிக்கு வந்து சேர்ந்து, அங்கு போர் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டு, பொருளாதார, ஊடக தடைகளுக்கு உட்படுத்தப்பட்டு அந்த இனம் ஏறக்குறைய 5 ஆண்டு காலம் தகர்க்கப்பட்டபோது இந்த சீமான் எங்கே இருந்தார்? 4 பேரின் பசியை போக்கவோ அல்லது அவர்களது மருத்துவ தேவைக்கோ ஏதேனும் அவர் செய்தாரா? அல்லது ஓரு சமாதான காலம் என்று நடக்கிறது. அப்போது போனார். ஒருவேளை புகைப்படம் எடுத்திருக்கலாம். அவர் ஒரு சாதாரண பயணி அவ்வளவுதான். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதன் பிறகு இலங்கையில் போர் வெடிக்கிறது. தமிழ்நாட்டில் தன்னெழுச்சியாக பல முயற்சிகள் நடக்கின்றன. அதில் முத்துக்குமாரின் தியாகம் உள்ளிட்ட பல முயற்சிகள் நடந்தன. அந்த வேளையில் தந்தை பெரியார் இயக்கம்தான் அவருக்கு மேடை அமைத்துக் கொடுத்தார்கள். பெரியார் பின்புலத்தில் இருந்த தமிழ் உணர்வாளர்கள் தான் அவருக்கு மேடை அமைத்து கொடுத்தார்கள். அதன் வாயிலாக ஒரு ஒளிவட்டம் சீமானுக்கு கிடைக்க தொடங்கியது.

"விடுதலைப் புலிகள் எங்கிருக்கிறது?"- சீமான் சரமாரி கேள்வி!

2009 முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கு 5 மாதங்களுக்கு முன்பு நான், மருத்துவரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான எழிலன், பத்திரிகையாளர் குணசேகரன் உள்ளிட்ட 20 பேர் பொதுச் சமூகமாக நின்று இலங்கையில் போரை நிறுத்துவதற்கான குரலை இந்திய மயப்படுத்த வேண்டும் என்று நடந்த உரையாடலின் அடிப்படையில் தொடங்கப்பட்ட ஒரு முயற்சிதான் நாம் தமிழர் இயக்கம். இந்த முயற்சிக்கான முதல் கூட்டம் எனது இல்லத்தில் தான் நடைபெற்றது. 2 மற்றும் 3வது கூட்டங்கள் வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. 4, 5 மற்றும் 6-வது கூட்டங்கள் இயக்குநர் மணிவண்ணன் வீட்டில் நடைபெற்றது. அப்போது சென்னையில் ஒரு 2 லட்சம் பேரை திரட்டி மத்திய, மாநில அரசுகளுக்கு போரை நிறுத்த அழுத்தம் தருவதற்காக மாபெரும் மக்கள் எழுச்சியை காட்ட வேண்டும் என நாங்கள் எல்லாம் திட்டமிட்டு, களப் பணிகளில் ஈடுபட்டிருந்தோம். அடுத்து ஒரு கூட்டம் மணிவண்ணன் வீட்டில் நடைபெற இருந்தது. களப்பணிகள் காரணமாக நாங்கள் பங்கேற்க முடியவில்லை. அப்போதுதான் யார் வந்தார்களோ என தெரியவில்லை?. நான் நினைக்கிறேன் இன்று நடப்பதை பார்த்தால், அது உளவுத்துறையாகத் தான் இருக்க வேண்டும் என்று. அந்த இடத்தில்தான் சென்னையில் நடைபெற வேண்டிய எழுச்சி பேரணியை மதுரையில் நடத்துவதாக சொன்னார்கள். நாங்கள் கருத்து வேறுபட்டு விவாதித்தோம். ஆனால் அவர்கள் மணிவண்ணனிடமும் பேசி சம்மதிக்க வைத்திருந்தனர். அந்த மாநாட்டிற்கு நானும் பணம் திரட்டி தந்தேன். மதுரை மாநாட்டிற்கு நானும் பேசுவதற்காக சென்றேன். அங்கு சென்ற போதுதான் தெரிந்தது. அது இலங்கையில் நடைபெற்று வந்த போரை தடுத்து நிறுத்துவதற்காக நடைபெற்ற கூட்டம் அல்ல. சீமான் என்ற நபரை அரசியலுக்கு கொண்டு வருவதற்காக நடத்தப்பட்ட கூட்டம் என்று. கருவிலேயே குற்றம். தாய்ப்பாலிலேயே நஞ்சு. ஒரு இனத்தினுடைய அழிவை தன்னுடைய சுய அரசியலுக்காக தொடங்கிய ஒரு இயக்கம்தான் நாம் தமிழர் என்ற கட்சி தொடங்கப்பட்டது. பின்னர் போக போகத்தான் எனக்கு தெரிந்தது. அது உளவுத்துறை துல்லியமாக திட்டமிட்டு, போர் முடிகிற போதோ எப்படி எழுச்சியை சமன் செய்வது என்று செய்த முயற்சி ஆகும் என்பது தெரியவந்தது.

இப்படி ஒரு பேரிடர் நிகழும்போது தமிழ் உணர்வு கொண்ட ஒரு பெரும் எழுச்சி நடக்கும். எப்போதும் அரசியலுக்கான எரிபொருள் என்பது ஒரு சதவீதம் பேர்தான். அவர்களை ஒன்று சேர்த்து வைத்தால் ஒன்று பத்தாகும். இப்படிதான் அரசியல் கட்டமைக்கப்படுகிறது. இவர்கள் இல்லாமல் நீங்கள் அரசியலை கட்டமைப்பது மிகவும் சிரமமானது. ஸ்டார்ட்டஜிக் தியரியில் என்ன சொல்கிறது என்றால், இந்த ஒரு சதவீத நபர்களை ஒன்று சேர்த்து இவர்களை நீங்கள் சிங்கம், புலி என்று கருது வீர்களாயேனால் இவர்களுக்கு தலைவராக ஒரு கழுதையை வைக்க வேண்டும் என்பதுதான். கால ஓட்டத்தில் இந்த புலிகளும், சிங்கங்களும் கழுதையாக மாறிவிடும். அந்த தியரியை உளவுத்துறை செயல்படுத்தியது. அப்படி வந்த ஒரு கேரக்டர்தான் சீமான். இப்படி சொல்வதற்காக மன்னிப்பு கோருகிறேன். 2008 இறுதிப் பகுதியில் உரையாடல் ஏற்பாடுகள் நடக்கிறது. பின்னர் 2009 தொடக்கம். பின்னர் முள்ளிவாய்க்கால் நெருங்கி வருகிறது. அப்போது மதுரையில் மாநாடு நடக்கிறது.

வைக்கம் போராட்டத்தின் நூறாண்டு வரலாறு

நீங்கள் பின்னோக்கி சென்று மறுகட்டமைப்பு செய்கிறபோது ஈழ விடுதலைப் போராட்டம், எப்படி தந்தை பெரியாருக்கு எதிரான இயக்கமாக மாறியது. இதை அழிக்க வேண்டும் என முடிவு எடுத்தது யார்? தந்தை பெரியார் சார்ந்த இயக்கங்களா இந்த முடிவை எடுத்தன? திமுக மீது இன்றும் குற்றச்சாட்டு வைப்பேன் போரை தடுத்து நிறுத்த தமிழகத்தையும், குறைந்தபட்சம் உங்களது கட்சியினரை ஒருங்கிணைக்கவில்லை. நீங்கள் தமிழ், தமிழினம் என்ற அடிப்படையில் அரசியல் செய்கிறீர்கள் என்றால், அந்த இடத்தில் மக்களை திரட்டி அதற்காக பெரிய விலையை நீங்கள் கொடுத்திருக்கலாம். தமிழினத்தை பிரதிநிதித்துவப் படுத்துவது என்றால், தமிழினத்திற்கு எங்கு எந்த இடர் வந்தாலும் அதற்காக நின்று போராடி, இழப்புகளை சந்திக்க வேண்டிய ஒரு அறம் என்பது உங்களுக்கு உண்டு. ஈழ விடுதலைக்காக 2 முறை ஆட்சியை இழந்து, எத்தனை இடர்களை சந்தித்து  சிறை சென்று, பல இழப்புகளை சந்தித்த கட்சி திமுக. ஆனால் 2009ல் நாங்கள் தவறு செய்தோம் என எழுந்து நின்று சொல்ல வேண்டும். அரசியல் தீர்வு பெற்றுத்தர நாங்கள் போராடுவோம் என்று சொல்வது தான் தகுதியான கட்சிக்கு அடையாளம். ஆனால் தமிழர்களை அழிக்க வேண்டும் என்கிற முடிவில் திமுகவுக்கு பங்கு கிடையாது. அது மத்திய அரசு எடுத்த முடிவு. அனைத்துலக ஒப்புதலுடன் இது நடைபெற்றது. ஏனென்றால் இது புவிசார் பிரச்சினையாகும் விவகாரம் ஆகும். மத்திய அரசின் உடன்பாடு தான் இது நடைபெற்றது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ