அரசு முறை பயணமாக திருநெல்வேலிக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “36 ஆயிரத்து 97 கோடி ரூபாய் மழை வெள்ள பாதிப்பிற்கு கேட்டபோது வெறும் 26 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது இப்படித்தான் மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நடந்த பட்ஜெட்டில் ஆவது ஏதாவது ஒதுக்கி இருக்க வேண்டும் அதுவும் கிடையாது. தமிழகத்திற்கு நிதியும் கிடையாது நீதியும் கிடையாது என ஒதுக்கி விட்டார்கள் என்றார். மேலும் தமிழகத்திற்கு என்று சிறப்பு திட்டங்கள் அறிவிக்க வேண்டாமா? இப்படி நாம் கேட்கும் கேள்விகளுக்கு எதுவுமே பதில் வராது, திருநெல்வேலி அல்வா என்றால் உலகத்திலேயே ஃபேமஸ், ஒன்றிய அரசு கொடுக்கும் அல்வா தான் அதைவிட ஃபேமஸ் ஆக உள்ளது என மத்திய அரசை விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ்தளப்பதிவில், ”திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க விட்டுவிட்டு, இந்திக் கூட்டணிக் கூட்டத்தில் சமோசா சாப்பிட டெல்லி வரை சென்றீர்களே. அது நினைவில்லையா முதலமைச்சர் அவர்களே? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் சென்று, உங்கள் டிராமா மாடல் அரசின் பொய்களைப் பரப்ப வெட்கமாக இல்லையா?” எனக்கேட்டு திமுக வாக்குறுதியாக குறி நிறைவேற்றாத திட்டங்களை பட்டியலிட்டுள்ளார். அதில், அல்வா வகைகள் : கல்விக்கடன் தள்ளுபடி, பயிர்க்கடன் தள்ளுபடி, 5 சவரன் வரையிலான நகைக்கடன் முழுமையாக தள்ளுபடி.
சிலிண்டர் ரூ.100 மானியம், டீசல் விலை ரூ.4 குறைப்பு, மாதம் ஒருமுறை மின்கட்டணம், 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக்குவோம். நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு 5.2500. கரும்பு ஆதரவு விலை டன்னுக்கு ரூ.4000. இந்து கோவில்களை புனரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு. அரசு துறைகளில் புதிதாக 2,00,000 பணியிடங்கள். காலியாக உள்ள 3.50.000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். பழைய ஓய்வூதிய திட்டம்”என பட்டியலை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை.
‘மு.க.ஸ்டாலின் அல்வா கடை” என பெயரிட்டுள்ள அண்ணாமலை, அண்ணா அறிவாலயத்தின் முழு முகவரியையும் குறிப்பிட்டு, எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை எனத் தெரிவித்துள்ளார். விலை ரூ.200 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.