டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஆவணங்கள் பாதுகாப்பு, பிற பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி தலைமைச் செயலகம் தற்காலிகமாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழக்கிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள், ஆம் ஆத்மி தோல்வியையும் 26 ஆண்டுகளுக்குப்பின் பாஜக ஆட்சியைக் கைப்பற்றுகிறது என்று தெரிவிக்கின்றன.
இதனால் டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மத்தியில் ஆளும் பாஜககட்சியை, டெல்லியிலும் ஆளப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பு, ரகசிய ஆவணங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், எதையும் வெளியே எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்காக டெல்லி தலைமைச்செயலகம் தற்காலிமாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லி நிர்வாகம் வெளியிட்டஅறிவிப்பில் “ பாதுகாப்பு காரணங்கள், ஆவணங்கள் பாதுகாப்பு ஆகியவற்றுக்காகவும், கணினியில் இருந்து எந்த தகவலையும், ஹார்ட்டிஸ்கையும் வெளியே கொண்டு செல்லக்கூடாது என்பதற்காகவும் டெல்லி தலைமைச் செயலக வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டு சீல் வைக்கப்படுகிறது.
ஆதலால் டெல்லி தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளும் தங்கள் பொறுப்பில் உள்ள அனைத்து ஆவணங்களையும், கோப்புகளையும், ரகசிய தகவல்கள் அடங்கிய கோப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவு தலைமைச் செயலகம், கேம்ப் ஆபிஸ், அமைச்சர்கள் அலுவலகம், பொறுப்பு அதிகாரிகள் அலுவலகங்கள் ஆகியவற்றுக்குப் பொருந்தும்” என இணைச் செயலர் பிரதீப் தயால் உத்தரவிட்டுள்ளார்.