டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளை படிப்பிணையாக கொண்டு இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களது செயல்பாட்டினை மறுஆய்வு செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாகவும், ஆம் ஆத்மி – காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் தராசு ஷியாம் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை வழக்கில் இடைக்கால ஜாமின் பெற்று வெளியே வந்தபோதே தன்னை ஒரு மிகப்பெரிய தேசிய தலைவராக நினைத்துக் கொண்டுதான் கூட்டங்களில் பேசினார். அது தவறானது. கெஜ்ரிவால் தனது உயரத்தையே இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அவர் இன்னும் தேசிய தலைவர் அந்தஸ்துக்கு செல்லவில்லை. ராகுல்காந்தியே இப்போதுதான் தேசிய தலைவர் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறார். இன்னும் அவர் அந்த நிலையை அடையவில்லை. பாஜக, அந்த கட்சியின் தேசிய தலைவருக்கான முகமாக மோடி பொருந்திவிட்டார். அதனை எதிர்த்து யார் நிற்பது என்றால் பல்வேறு மாநிலங்களில் செல்வாக்கு உள்ள பல்வேறு தலைவர்களின் கூட்டு கலவைதான். ராகுல்காந்தி அவர்களில் ஒருவர்தான். அவரது முகம் இந்தியா முழுவதும் பரவி இருக்கும். ஆனால் அவரது செல்வாக்கு என்பது சில மாநிலங்களில் இருக்கும். பல மாநிலங்களில் இல்லாமல் இருக்கும். அரவிந்த் கெஜ்ரிவாலின் செல்வாக்கு என்பது ஓரிரு மாநிலங்களில்தான் இருக்கும்.
பஞ்சாப் முதலமைச்சர் முழுபக்க விளம்பரம் தமிழ்நாட்டில் ஆங்கில பத்திரிகைகளில் தினசரி காணலாம். அதனால் என்ன பயன்? இங்குள்ளவர்கள் வாக்களிக்க போகிறார்களா? ஒரு கட்சி என்பது கட்டுமானம் இல்லாவிட்டால் அந்த கட்சிக்கு வாக்கு அரசியலில் வெற்றி கிடைக்காது. ஆம் ஆத்மி கட்சி கடுமையான சூழலிலும் இந்த அளவிற்கு வாக்குகளை வாங்கியுள்ளனர். ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவுதான். ஓரளவுக்கு தொகுதிகளை பிடித்துள்ளனர். அப்படி என்றால் ஆம் ஆத்மிக்கு டெல்லி, பஞ்சாபில் கட்டுமானம் உள்ளது. ஆனால் கட்டுமானம் இல்லாத குஜராத்தில் அவர்கள் காங்கிரசுக்கு கீழ்தான் செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் குஜராத்தில் விஷப்பரீட்சைக்கு சென்றனர். ஆம் ஆத்மி இன்னும் அந்த உயரத்தை அடையவில்லை. ஆனால் உயரத்தை அடைந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு சிறகுகளை விரிக்கிறார்கள். அப்படி சூரியனின் அருகில் சென்றால் சுற்றெரித்து விடும். மம்தா பேனர்ஜி, மேற்குவங்கத்தை கடந்து றெக்கை விரித்தால் வெட்டிவிடுவார்கள்.
மாநிலங்களில் யாருக்கு வலிமை உள்ளதோ? அவர்களுடன் சேர்ந்து தேசிய கட்சிகள் கூட்டணி வைத்து அவர்களுக்கு விட்டுத்தர வேண்டும். அந்த வரிசையில் காங்கிரசும் பொருந்தும். இப்போது ஹரியானாவில் காங்கிரஸ் தோற்றுவிட்டது. ஆனால் அதிகளவில் வாக்குகளை பெற்றனர். நிறைய இடங்களை பிடித்துவிட்டனர். ஆனால் இன்னும் எதிர்க்கட்சி தலைவரை அவர்களால் அறிவிக்க முடியவில்லை. காரணம் மத்திய அமைப்பால், மாநில கட்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. இதேபோல்தான் மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைந்து எவ்வளவு நாள் ஆகிறது. உள்ளாட்சி தேர்தல் வருகிறது. அதில் தனித்தனியே நிற்கலாம் என பாஜக சொல்கிறது. அப்படி என்றால் அங்கே பிரச்சினை உள்ளதாகதான் அர்த்தம். ஒருங்கிணைப்பும் அடிப்படை கட்டுமானமும் இல்லாமல் எப்படி வெற்றி பெற முடியும்.
!["சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமருக்கு துணிச்சல், ஆற்றல் இல்லை"- ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/10/rahul6-1.jpg)
காங்கிரசுக்கு, மாநில கட்சிகளின் துணை தேவை. அதேபோல் மாநில கட்சிகளுக்கு காங்கிரசின் துணையும் தேவை. டெல்லியில் காங்கிரஸ் உள்ளுர் தலைவர்கள் தனியாக போட்டியிட வேண்டும் என்றுதான் சொல்வார்கள். ஆனால் கட்சியின் மத்திய தலைமை அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் நிலையில் இல்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி பலவீனமான நிலையில் உள்ளார். ராகுல்காந்தி, மாநிலத்தின் மீது அவரது விருப்பத்தை திணிக்க தொடக்கம் முதலே விரும்பவில்லை. டெல்லியில் காங்கிரசுக்கு 6 சதவீத வாக்குகள் உள்ளன. நீங்கள் புள்ளி விபரங்களை கணக்கிட்டு பார்த்தீர்கள் என்றால், பல இடங்களில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு அதுதான் காரணமாக அமைந்திருக்கும். பாஜகவை வீழ்த்த வேண்டும் என நினைத்தால் முதலில் நீங்கள் தியாகம் செய்ய வேண்டும் அல்லவா? நாம்தான் விட்டுக்கொடுக்க வேண்டும்.
மதுபான வழக்கில் கெஜ்ரிவால் சிறை சென்றதால் அனுதாப ஓட்டுக்கள் விழுந்ததா என்கிறார்கள். தமிழகத்தில் 1976ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. இன்றைய முதலமைச்சரை மிசா சட்டத்தில் கைது செய்தனர். ஆனால் 1977 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்ததது. அடுத்த இரண்டை ஆண்டுகளில் திமுக – இந்திரா காங்கிரஸ் கூட்டணி. மக்கள் அருவருப்பு அடைந்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஒவ்வொரு தேர்தலும் அடிப்படையில் வேறானவை. பாஜக மத்திய பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பை நீக்கியது, டெல்லியின் நடுத்தர வாக்காளர்களை குறிவைத்தனர். அந்த வாக்குகள் கொஞ்சம் மாறியுள்ளனர். ஆம் ஆத்மியின் வழக்கமான வாக்குகளை இழந்திருப்பதாகதான் நினைக்கிறேன்.
2 முறை ஆட்சியில் இருந்ததால் அரசுக்கு எதிரான மனநிலை இருக்கும். அவர்கள் 25 இடங்களுக்கு மேல் பிடித்தாலே பெரிய விஷயம்தான். அவர்களது ஒரே நம்பிக்கை என்ன அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை கொடுமை செய்தது என்பது தான். ஆனால் அரசியல்வாதிகள் மீது எப்போதும் வாக்காளர்களுக்கு அனுதாபமே வராது. மேலும் இடைக்கால ஜாமினில் வழங்கிய நிபந்தனைகள். அதனால்தான் அதிஷியை முதலமைச்சர் ஆக்கினார்கள். இன்று ஆம் ஆத்மியே வெற்றி பெற்றிருந்தாலும் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் எப்படி சட்டமன்றத்திற்கு செல்ல முடியும். நீங்கள் திரும்ப உச்சநீதிமன்றத்திற்கு சென்றுதான் விளக்கம் கேட்க வேண்டும். மக்களுக்கு இந்த விஷயங்கள் தெரியாது என நினைக்கின்றனர். சாதாரண வாக்காளர்கள் அரசியல்வாதிகளை விட மிகவும் புத்திசாலிகள் ஆவார்கள். இதை அரசியல் தலைவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
சட்டமன்ற தேர்தல்களில் பாஜக தொடர்ந்து வெற்றி பெறுவது அந்த கட்சி இன்னும் அந்த அளவிற்கு பலவீனம் அடையவில்லை என்பதைதான் காட்டுகிறது. ஹரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அடிப்படை தவறுகள் என்ன எல்லாம் செய்தார்கள் என்று யோசித்து பாருங்கள். இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்தார்களா? ஹரியானாவில் கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் போட்டியிட்டன. வாக்குகள் சிதறின. புள்ளி விபரங்களை ஆய்வு செய்து பார்த்தபோது காங்கிரஸ் வெற்றி பெற வேண்டிய பல இடங்களை கோட்டை விட்டது. மகாராஷ்டிரா தேர்தலை ஒரு மாநில தேர்தலாகவா? காங்கிரஸ் கூட்டணி எதிர்கொண்டது. மீண்டும் நாடாளுமன்ற தேர்தலை போன்று அரசியல் அமைப்பு சட்டம், இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு என்று பேசினார்கள். பாஜக ஒரு மாநில தேர்தலாக மாற்றினாரகள். மக்கள் நல திட்டங்களை அறிவித்தார்கள். உண்மையில் மும்பைக்குள் வரும் சுங்க கட்டணங்களை ரத்து செய்தனர்.
மாநில தேர்தலை மாநில பிரச்சினைகளுடன் அணுக வேண்டும். தமிழக பாஜகவின் பிரச்சினை என்ன? அவர்கள் தமிழ்நாடு பிரச்சினைகளுக்காக அவர்கள் அரசியல் செய்யவே மாட்டார்கள். அவர்கள் தேச அரசியல் தான் செய்வாகள். அதனால் திமுக மீது அதிருப்தியில் உள்ளவர்களும் அந்த கட்சிக்கே மீண்டும் வாக்களித்துவிடுவார்கள். மாநில அரசியல் பிரச்சினைகளுக்காக அரசியல் செய்ய வேண்டும். 2 தேர்தல் முடிவுகளும் இப்படித்தான் இருக்கும் என்று யூகித்தேன். அதுபோலவே வந்துள்ளது. இந்தியா கூட்டணி மீண்டும் அமர்ந்து பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.