மாநிலங்களுக்கு நிதி தராத ஒன்றிய அரசு கடன் கொடுக்கிறது. அதுவும் வட்டி இல்லாத கடனாம். வடக்கில் நடப்பது ஆட்சியா? இல்லை வட்டிக்கடையா?என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை சாடினார்.
மத்திய அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் ஆவடியில் நடைபெற்றது. அப்போது, நிதி ஒதுக்காததற்கு கண்டனம் தெரிவித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ”12 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு வரி இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்திய நாட்டினுடைய மக்கள் தொகை எவ்வளவு 140 கோடி. அதில் 2 விழுக்காட்டுக்கு குறைவான மக்களுக்கு தான் சலுகையை தவிர, வேறு இல்லை. இது பெரிய சாதனையாக காட்டுகிறார்கள்.
அனைத்து மாநிலங்களுக்கான ஒன்றிய பட்ஜெட் என்று சொல்லிவிட்டு பீகார், பீகார்.. பிஹார் என்று ஆறு முறை சொல்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். என்ன காரணம் ஏனென்றால் அங்கு தான் சட்டமன்ற தேர்தல் விரைவில் வரப்போகிறது. கடந்த முறை நிதி அறிக்கை என்னவாயிற்று? ஆந்திரா என்று அறிவித்தார்கள். அங்கே சட்டமன்றத் தேர்தல் வந்ததால் அப்படி சொன்னார்கள். இப்போது பீகாரில் தேர்தல் வரப்போகிறது என்பதால் பீகார் பீகார் என்று சொல்கிறார்கள்.
பீகாருக்கும்,ஆந்திராவுக்கும் திட்டங்களை ஒதுக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. எங்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? என்று தான் நாங்கள் கேட்கிறோம். தமிழ்நாட்டுக்கான புதிய சிறப்பு திட்டம் உண்டா? இல்லை. தமிழ் நாட்டுக்கான புதிய ரயில்வே திட்டம் உண்டா? இல்லை. ரயில்வே திட்டங்களுக்கான நிதியாவது அதிகப்படுத்தி இருக்கிறார்களா? இல்லை. சென்னை இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிதி உண்டா? இல்லை. பெஞ்சால் புயலுக்கு இழப்பீடு உண்டா? கிடையாது.நிக்ஜாம் புயலுக்கு இழப்பீடு உண்டா? அதுவும் கிடையாது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி உண்டா? கிடையவே கிடையாது. ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கு நிதி இருக்கிறதா? இல்லை. குடிநீர் திட்டத்திற்கு இல்லை… வீடு கட்டும் திட்டத்திற்கு இல்லை… எதை எடுத்தாலும் இல்லை.. இல்லை.. இல்லைதான்.
இதற்கு பெயர் பட்ஜெட்டா மாண்புமிகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே..? தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்பது பெருமையா? இல்லை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்குவது பெருமையா? யோசித்துப் பாருங்கள். உங்களுடைய மனசாட்சிக்கு இதை விட்டு விடுகிறேன். மாநிலங்களுக்கு நிதி தராத ஒன்றிய அரசு கடன் கொடுக்கிறது. அதுவும் வட்டி இல்லாத கடனாம். வடக்கில் நடப்பது ஆட்சியா? இல்லை வட்டிக்கடையா? அப்பா தன் பிள்ளையோட படிப்புக்கு, உடைக்கு, உணவுக்கு பணம் தராமல் கடன் தருகிறேன் என்று சொல்ல முடியுமா? அப்படி கொடுத்தால் அதற்கு பெயர் குடும்பமா?
மாநிலங்களை ஒருங்கிணைத்து ஆட்சி செய்கிற மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு நிதி தராமல் கடன் தருகிறேன் என்று சொல்வதற்கு பெயர் ஆட்சியா ? இதுதான் கூட்டாட்சியா? சட்டப்படி ஆட்சி செய்கிறீர்களா? அல்லது உங்கள் இஷ்டப்படி ஆட்சி செய்கிறீர்களா? இந்திய பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிப்பது ஏன்? தமிழ்நாடு என்றால் பாஜகவுக்கு பிடிக்கவில்லையா? பாஜகவுக்கு வாக்களிக்காத மக்கள் இருக்கிற மாநிலம் என்று நிதி கொடுக்க மறுக்கிறார்கள். ஒன்றிய பாஜக அரசுக்கு நான் சொல்வதெல்லாம் நீங்கள் நிதியை கொடுக்காமல் இருக்கலாம். ஆனால், நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம். நீங்கள் வேண்டுமானால் வஞ்சிப்பவர்களாக இருக்கலாம். நாங்கள் வாழ வைப்பவர்கள்” என்று மு.க.ஸ்டாலின் மத்திய அரசை எச்சரித்துள்ளார்.