திருப்பரங்குன்றம் கோவில் மலை விவகாரத்தில் மதவாத சக்திகள் ஒற்றுமையாக உள்ள இந்து- முஸ்லிம் மக்கள் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சிப்பதாக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :- நான் பிரமலை கள்ளர் சமுதாயத்தில் சிக்கந்தர் மலை கோவில் குடும்பிடும் பிரிவை சேர்ந்தவன். பிரன்மலை கள்ளர் சமுதாயத்தினர் திடியன், வாலாந்தூர், புத்தூர், கருமாத்தூர் உள்ளிட்ட 8 நாடுகளாக பிரித்து வாழ்ந்து வருகிறோம். திருப்பரங்குன்றத்தில் 400 முதல் 500 ஆண்டுகளுக்கு முன்பு வந்து குடியேறியவர்கள் நாங்கள். அந்த மலைக்கும், அந்த பகுதிக்கும் பாதுகாவல் நாங்கள்தான். அதனால் தான் சிக்கந்தர் மலை கோவில் குடும்பிடுபவர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறது. சிக்கந்தர் மலையில் வசித்ததால் நாங்கள் உசிலம்பட்டிக்கு வர நாள் ஆகிவிட்டது. அதனால் கள்ளர் நாடு பிரிக்கப்பட்டபோது நாங்கள் அதில் இல்லை. பிரித்த பிறகு நாங்கள் தாமதமாக வந்து சேர்ந்தோம். இதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமியர் ஆட்சி மதுரையில் இருந்தது. அப்போது சிக்கந்தர் என்பவர் இறந்ததால் அங்கு தர்கா போன்று அமைத்து வழிபட்டு வந்தனர். அந்த தர்காவுக்கு வருபவர்களில் இந்துக்கள் தான் அதிகம். இதில் பிரன்மலை கள்ளர்களுக்கோ, அங்கிருக்கும் இஸ்லாமியர்களுக்கோ எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
இப்போது புதிதாக வந்து கிடாய் வெட்டுவேன், பிரியாணி கொடுப்பேன், ரத்த பலி காமிப்பேன் என்று சொல்லும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து – முஸ்லீம்களுக்கு இடையே எந்த பிரிவினையும் இல்லை. தேவையின்றி இந்து முன்னணி – ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் விவாதத்தை ஏற்படுத்துவது மாபெரும் தவறாகும். சிக்கந்தர் மலையில் கோவிலில் கிடாய் வெட்டுவது என்று சொல்வதே தவறு. அது எப்போதாவது ஒருமுறைதான் செய்வார்கள். வழக்கமாக அங்கு இதுபோன்று செய்வது இல்லை. இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் தர்காகளுக்கு செல்வது கிடையாது. திருப்பரங்குன்றம் கோவில் மலையை, சிக்கந்தர் மலை என மாற்ற யாரும் முயற்சிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்- இந்து முன்னணி போன்றோரின் தொடர் போராட்டங்களால் திருப்பரங்குன்றம் பகுதி பெதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதனால் பொது அமைதியை பாதுகாப்பதற்காக 144 தடை உத்தரவு போடப்பட்டது.
திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கர் தர்காவையே, இந்துக்கள் தமக்கு சொந்தமான மலையாகத்தான் பார்க்கிறோம். எப்போதும் போலவும் சிக்கந்தர் அங்கிருக்கட்டும், முருகன் கோவில் இங்கேயே இருக்கட்டும். வழிபடுபவர்கள் இரண்டு இடங்களுக்கும் செல்லட்டும். பிரமலை கள்ளர் சமுதாயத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே கலாச்சார ஒற்றுமை அதிகம் உள்ளது. அதற்கு காரணம் இஸ்லாமியர்கள் காலம் காலமாக இங்கு வாழ்ந்தவர்கள்தான். பின்னர் இஸ்லாத்துக்கு மாறினார்கள். ஆனால் நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். சில மதவாத அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலை பிரச்சினையை கையில் எடுத்து மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதுபோன்ற மதவாத பிரச்சினைகளை எழுப்புவதால் தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் வளராது.
![H RAJA](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-06-at-12.26.54-PM-1.jpeg)
மத்திய பட்ஜெட்டில் சட்டமன்ற தேர்தல் வருவதால் பீகார், டெல்லிக்கு அள்ளி கொடுக்கிறார்கள். பீகார் தேர்தலை மனதில் வைத்து வக்பு வாரிய திருத்த சட்டத்தை கொண்டுவர உள்ளனர். நாட்டின் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிற்கு வேண்டிய வசதிகளை செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். திமுக இந்தியா கூட்டணியில் இருந்து 40 தொகுதிகளையும் வென்றதாலும், அவர்கள் பெரும்பான்மை பெறாமல் போனதற்கு திமுகதான் முழு காரணம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, மோடி அரசு தமிழ்நாட்டை பழிவாங்குகிறது. தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மறுக்கிறது. மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டிய திட்டங்களை மக்களுக்கு கொடுத்து சிறந்த மாநிலமாக தமிழகத்தை வைத்துள்ளார் என்றால் அதை பாராட்ட வேண்டும். பாராமுகமாக இருக்கக்கூடாது.
நாடு முழுவதும் ரயில்களில் உணவு மற்றும் கழிவறைகள் சுகாதாரமான முறையில் இல்லை. முதல் வகுப்பில் செல்லும்போதே இந்த நிலை என்றால், மற்ற வகுப்புகளில் எப்படி இருக்கும் என யோசித்து பாருங்கள். நான் மத்திய ரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்து இது தொடர்பாக பேசினேன். மேலும் ரயில்களுக்கு மாநிலங்களின் பெயர்களை வைக்க வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால் பெயர் வைக்கவில்லை. எனது நாடாளுமன்ற கன்னிப் பேச்சில் 100 கோரிக்கையான திண்டுக்கல் – சபரிமலை இடையே ரயில் வழித்தடம் அமைக்க கோரிக்கை விடுத்தேன். ஆனால் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அப்படி இல்லாவிட்டால் கொடை ரோடு முதல் தேனிக்கு ரயில் விட்டால், நாடு முழுவதும் இருந்தும் பக்தர்கள் தேனிக்கு வருவார்கள். அங்கிருந்து சாலை மார்க்கமாக சபரிமலைக்கு சென்று விடுவார்கள். இந்த திட்டத்தால் தமிழ்நாடு, கேரளா பயன்பெறும் என்பதால் செயல்படுத்த மறுக்கிறார்கள்.
தமிழகத்தில் மக்கள் பாஜக பக்கம் வந்துவிட்டனர் என அண்ணாமலையும், ஹெச். ராஜாவும் சொல்கிறார்கள். அப்படி மக்கள் வந்துவிட்டர்கள் என்றால் அவர்கள் மோடியிடம் சொல்லி தமிழ்நாட்டு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வலியுறுத்த வேண்டும். பேரிடர் நிவாரண நிதி, புதிய ரயில்வே திட்டங்கள், ஏர்போர்ட் விரிவாக்கத்திற்கு நிதி கொடுங்கள் என்று மோடியிடம் சொன்னால் தமிழகத்தில் பாஜக வளர வாய்ப்பு உள்ளது. ஆனால் அவர்களுடன் சேர்ந்து ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தால் பாஜக எப்படி வளரும்?. தமிழ்நாட்டில் இந்துக்கள்தான் அதிகம் வசிக்கின்றனர். அவர்களிடம் சென்று நான் இந்துக்களின் பாதுகாவலன் என எத்தனை நாட்கள் சொல்வீர்கள். அயோத்தியில் பாஜகவினர் ராமர் கோவில் கட்டினார்கள். ஆனால் அந்த தொகுதியில் ஏன் தோற்றார்கள்?. திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்திலும் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்காது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.