ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் சீமானுக்கு, தங்களின் வாக்குகள் சென்றுவிடக் கூடாது என்பதில் அதிமுக – பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் உறுதியுடன் இருந்தனர் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன், பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சீமான் டெபாசிட் வாங்கக் கூடாது என்று திமுக நினைத்தது. இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், பெரியாரை பற்றி பேசியதற்கான முடிவு இதுதான் என அவருக்கு பாடம் கற்பிக்க எண்ணியது. அதே நேரத்தில் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளும், சீமான் அதிகளவு வாக்குகள் பெற்றுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் என்பதும் உண்மை. உதாரணமாக அதிமுக வாக்குகள், பாஜக வாக்குகள் சீமானுக்கு சென்றிருந்தால், அவர் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்று, தனது இமேஜை தக்க வைத்துக்கொண்டிருக்கலாம். அப்படி ஒரு இமேஜ் சீமானுக்கு வருவதில் எதிர்க்கட்சிகளுக்கு உடன்பாடு இல்லை. அவர்கள் போட்டியிடவும் தயாராக இல்லை. அதேவேளையில் ஒருவர் போட்டியிடுகிறார் என்றால், அவருக்கு சரியான வாக்குகள் கிடைக்கக் கூடாது என்பதிலும் திமுக அளவிற்கு உறுதியாக உள்ளனர்.
சீமானுக்கு, ஓரளவிற்கு அதிமுக, பாஜகவிடம் இருந்து வாக்குகள் கிடைத்திருக்க வாய்ப்பு உள்ளது. அதனை கடந்து நடுநிலை வாக்காளர்கள் சீமானுக்கு வாக்களித்திருப்பார்கள். இதே வேறு ஒரு வேட்பாளர் நின்றிருந்தால், இந்த அளவிற்கு வாக்குகள் கிடைத்திருக்காது. ஈரோடு இடைத் தேர்தலில் சீமான், பாஜகவின் ஆதரவை வெளிப்படையாக கேட்டிருந்து, அவர்கள் வழங்கி இருந்தால் அதன் பின்னர் நாம் தமிழர் கட்சி பெற்ற அனைத்து வாக்குகளும் தங்களால் வந்தது என்று சொல்லி விடுவார்கள். சீமானையும் ஆதரித்து இருப்பார்கள். ஆனால் வெளிப்படையாக கேட்காத போது அவருக்கு பாஜகவின் வாக்குகள் சென்றால் தங்களை பலவீனப் படுத்தும் என்று நினைத்திருக்கலாம். அதனால் தங்களது வாக்குகள் சீமானுக்கு செல்லாமல் இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதி இருப்பார்கள். நோட்ட வாக்குகள் அதிகம் விழுந்திருக்கிறது. பொதுவாக மக்களுக்கு தேர்தல் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. இந்த தேர்தலில் நம்பிக்கை இன்மை மேலும் அதிகரித்துள்ளது. இப்படி அதிகமானோர் வாக்களிக்கவில்லை என்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை குறைவதை தான் காட்டுகிறது. இது கவலை அளிக்கக்கூடிய விஷயம்தான்.
ஒரு தேர்தலின்போது வாக்குப்பதிவு அதிகளவு நடைபெறவில்லை என்றால், மக்களுக்கு அரசு மீது பெரிய அளவில் அதிருப்தி இல்லை என்று அர்த்தம். அதே வேளையில் அதிகளவு வாக்குப்பதிவு நடைபெற்றது என்றால், ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் திரள் திரளாக வந்து வாக்களிப்பார்கள் என்பது பொருள். தற்போது ஈரோடு இடைத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது என்பதால், அரசின் மீதான நம்பிக்கை குறைய வில்லை என்பதை காட்டுகிறது. மேலும் மீண்டும் மீண்டும் இடைத்தேர்தல் வந்து கொண்டிருப்பதால் அவர்களுக்கு ஒருவித சலிப்பு ஏற்பட்டிருக்கலாம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் சீமானுக்கு மிகப்பெரிய ஆதரவு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. சீமான் திடீரென பெரியாரை தாக்கி பேசியது, நாம் தமிழர் என்று தமிழரை முதன்மை படுத்துவதற்காக தமிழர் என்ற மனப்பான்மையுடன் அவரது ஆதரவாளர்களாக இருந்தவர்கள். அந்த ஆதரவு தற்போது குறைந்து கொண்டுவருகிறது. சீமானிடம் ஸ்திரத்தன்மை வேண்டும். முதலில் பெரியாரிய வாதியாக ஆரம்பித்தார். அதற்கு பிறகு பிரபாகரனை ஆதரிப்பதாக சொன்னார். இது இரண்டுக்கும் மிகப்பெரிய வேறுபாடு கிடையாது. ஆனால் என்று பிரபாகரன் திராவிட கட்சிகளை நம்பவில்லை என்று புதிதாக சொன்னாரோ, அன்றே அவர் மீதான நம்பகத்தன்மை போய்விட்டது. தேர்தலுக்கு முன்பாக பிரபாகரனுடன், சீமான் எடுத்துக் கொண்டதாக சொல்லப்பட்ட புகைப்படம் போலியாக தயாரிக்கப்பட்டது என்று புகார் எழுந்தது. இதனை அந்த படத்தை எடுத்தவரே நேரடியாக சொல்கிறார். சீமான் பிரபாகரனை சந்தித்தார் என்பதை யாரும் மறுக்க வில்லை. ஆனால் அந்த சந்திப்பால் என்ன என்ன நடந்ததது என்று சொன்னவற்றில், பல அப்படி நடந்தவை அல்ல என்று விவரம் தெரிந்தவர்கள் பேச தொடங்கி விட்டார்கள். இதனால் சீமான் மீதான நம்பக த்தன்மை பெருமளவு குறைந்துவிட்டது. அது வரும் தேர்தல்களிலும் எதிரொலிக்கத்தான் செய்யும். அதனால் சீமான் தான் சொன்னதற்கான ஆதாரங்களை காண்பிக்க வேண்டும்.
ஈரோடு இடைத்தேர்தலில் 2 கட்சிகள் மட்டுமே போட்டியிட்ட நிலையில், அதில் ஒரு கட்சி ஒரு லட்சத்திற்கு மேல் வாக்குகள் வாங்கி, மற்றொரு கட்சி டெபாசிட் இழக்கும் அளவுக்கு தான் வாக்குகள் வாங்கியுள்ளது என்றால், நாம் தமிழர் 20 ஆயிரம் வாக்குகள் வாங்கியதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இன்னும் ஒன்று, 2 கட்சிகள் தேர்தலில் போட்யிட்டிருந்தால் கூட நாதகவுக்கு 20 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருக்காது. இடைத் தேர்தல் முடிவுகள் மூலம் சீமானுக்கு பாடம் எடுத்து விட்டதாக எதிர்க் கட்சிகள் நினைக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். கருத்தியல் யுத்தம் என்று சொல்பவர்கள், அதில் தெளிவாக இருக்க வேண்டும். இன்று விஜய் திராவிடத்தை நம்புகிறேன், ஆனால் திராவிடத்தின் பெயரை சொல்லி கொள்ளையடித்துவிட்டார்கள் என்கிறார். அப்படி சொன்னர் ஏன் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்று கேள்வி எழுந்து கொணடு தான் இருக்கிறது. அதற்கு விஜய் பதில் சொல்லாவிட்டால் அவருக்கு சறுக்கலாகத்தான் அமையும்.
அதேபோல, அதிமுகவும்,பாஜகவும் கூட்டணி சேர்வார்களா என்பது மிகப்பெரிய கேள்வி. இவர்கள் மூன்று பேரும் தனித்தனியாக நின்றால் திமுகவுக்கு வேலை எளிதாகிவிடும். இன்று உள்ள சூழ்நிலையில் 3 பேரும் தனியாக இருப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாக உள்ளது. எப்படிபட்ட உத்தியை வைத்து அவர்கள் கூட்டணியை அமைக்க போகிறார்கள் என்பதை வைத்துதான் அவர்கள் வெற்றி வாய்ப்புகள் பற்றி சொல்ல முடியும். திமுகவை விரட்டும் அளவுக்கு ஒன்றிணைந்த எதிரிகள் தற்போது கிடையாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.