தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோருடன் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். விஜய்யின் நீலங்கரை இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகளை ஆதவ் அர்ஜுனா செய்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி தொடங்கிய விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு ஓராண்டாக செயல்பட்டு வருகிறார். இதற்காக சமீபத்தில் 5 கட்டமாக மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்தார். இதற்கிடையில் அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலர் நிர்மல் குமார் மற்றும் விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.
தவெக-வின் துணைப் பொதுச் செயலாளராக நிர்மல் குமாரும், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனாவும் நியமிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்களை நேரடியாக சென்று சந்திக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி இந்தாண்டு மார்ச் முதல் வாரத்தில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது
இந்த நிலையில், திடீர் திருப்பமாக பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், விஜய்யை சந்தித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ‘ஐபேக்’ நிறுவனம் மூலம் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூக பணிகளில் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டு வந்தார். 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு இவரது நிறுவனம் எந்த ஒரு கட்சிக்கும் தேர்தல் வியூக பணிகளில் ஈடுபடவில்லை.
எனினும், விஜய்யை சந்திக்க பிரசாந்த் கிஷோர் துவக்கத்தில் இருந்தே ஆர்வம் காட்டியதாக சொல்லப்படுகிறது. அதாவது, விக்கிரவாண்டி மாநாடு நடப்பதற்கு முன்பே பிரசாந்த் கிஷோர், விஜய்யை சந்திக்க நேரம் விரும்பியிருக்கிறார். எனினும் அப்போது இந்த சந்திப்பு நடைபெறவில்லை. இந்த சூழலில் தற்போது விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
தவெகவின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் ஆதவ் அர்ஜுனா ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பிரசாந்த் கிஷோர் தற்போது பீகாரில் தனியாக கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். இதனால், பிரசாந்த் கிஷோர் நேரடியாக தேர்தல் வியூக பணிகளில் ஈடுபடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேவேளையில், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனத்தின் வியூகம் அமைப்பதற்கான பணிகளில் மட்டும் பிரசாந்த் கிஷோர் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டமாக இது இருக்கலாம் எனவும் பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது ஜான் ஆரோக்கியசாமி, தவெக பொதுச்செயலாலர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய் – பிரசாந்த் கிஷோர் இடையேயான இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பு தி.மு.க.மற்றும் அ.தி.மு.க. இரண்டு தரப்பையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது!