தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான, 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை (13.02.2025) வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற உள்ளது
போக்குவரத்துத் துறையில் ஏற்படும் இழப்பை ஈடு செய்வது தொடர்பாக பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். கடந்த 21 மாதங்களாக ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் பணப்பலனை உடனடியாக வழங்க வேண்டும். முதலில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தி, முடித்த பிறகு தொழிற்சங்கங்களின் அங்கீகார தேர்தலை நடத்தலாம். இதற்கிடையே, ஊதிய உயர்வின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
சொற்ப அளவில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கியது ஏற்கதக்கதல்ல. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதோடு, காலிப்பணியிடங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். போக்குவரத்துத் துறைகளை மேம்படுத்துவதற்கு பதில், அரசு தனியார்மய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தனியாருக்கு மினி பேருந்து அனுமதி வழங்கவும், ப்ரீமியம் சர்வீஸ் என்னும் பெயரில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கும் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.
போக்குவரத்துத் துறைகளை சீர்குலைக்கும் தனியார்மய நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் 13ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளனர். இப்பேச்சுவார்த்தையில் தங்களது பேரவை, தொழிற்சங்கத்தின் சார்பாக ஒரு பிரதிநிதி மட்டும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் பிரதிநிதி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.