பாஜக தலைவர் பதவிக்கு பேரம் பேசும் ஆடியோ- விஷம் குடித்த நிர்வாகி
இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றிய பாஜக தலைவர் பதவிக்கு பணம் கேட்டு பேரம் பேசும் ஆடியோ வெளியானதை தொடர்ந்து அவமானம் தாங்காமல் பாஜக நிர்வாகி விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவராக இருப்பவர் பிரபாகார்த்திகேயன். இவர் போகலூர் ஒன்றிய தலைவர் பதவிக்கு மற்றொரு நபருடன் பேரம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது இதனைத் தொடர்ந்து முகநூலில் வந்த அந்த ஆடியோவுக்கு கமெண்டில் பலரும் கடுமையாக பிரபாகார்த்திகேயனை விமர்சித்து பதிவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென பிரபா கார்த்திகேயன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்துள்ளார். பாஜகவில் தன்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் சிலரின் தூண்டுதலின் பேரில் தன்னைப் பற்றி அவதூறு பரப்பி வருவதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விஷத்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். அதனை தொடர்ந்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் விஷம் குடித்த பாஜக பிரமுகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.