சேலத்தில் 500 கோடி ரூபாய் அளவில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்னைதெரசா அறக்கட்டளை நிர்வாகி விஜயாபானு, ஜெயப்பிரதா, சையது முகமது ஆகிய மூன்று பேரின் ஜாமீன் மனுவை கோவை டான்பிட் நீதிமன்றம் தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது…..
சேலம் மாநகர் அம்மாபேட்டை, சிவகாமி திருமண மண்டபத்தில் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை நடத்தி பணம் இரட்டிப்பு தருவதாக கூறி, பொதுமக்களிடமிருந்து 500 கோடி ரூபாய் அளவில் முதலீடு திரட்டி மோசடி நடப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அந்த அறக்கட்டளையில் சோதனையிட்டு எந்த அங்கீகாரமும் இல்லாமல் கவர்ச்சிகரமான திட்டங்களில் பணம் இரட்டிப்பு தருவதாக கூறி மோசடி நடப்பதை கண்டறிந்தனர்.
மேலும் மோசடியாக பணம் திரட்டியதாக 12 கோடியே 68 லட்ச ரூபாய் பணம் மற்றும் 2 ½ கிலோ தங்கம் 13 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு, மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்த அறக்கட்டளை நிர்வாகிகளான விஜயாபானு, ஜெயப்பிரதா , பாஸ்கர் , சையத் முகமது ஆகிய நான்கு பேரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு கோவை பொருளாதார குற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்றமான டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஜயாபானு, ஜெயப்பிரதா, சையத் முகமது ஆகிய மூன்று பேரும் கோவை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்று முன்தினம் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் ஆஜராகி இந்த மோசடி பெரிய அளவில் நடந்துள்ளது.
இன்னும் சிலரை கைது செய்ய வேண்டி உள்ளது. அதனால் மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை எடுத்து விஜயாபானு உள்ளிட்ட மூன்று பேரின் ஜாமீன் மனுவும் வரும் 17ஆம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மோசடியாளர்கள் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளானரா? என்பது குறித்தும் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்..