Homeதிருக்குறள்36 – மெய்யுணர்தல் - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

36 – மெய்யுணர்தல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

36 – மெய்யுணர்தல் - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

351. பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
        மருளானாம் மாணப் பிறப்பு

கலைஞர் குறல் விளக்கம்  – பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது.

352. இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
        மாசறு காட்சி யவர்க்கு

கலைஞர் குறல் விளக்கம்  – மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்.

353. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
        வான நணிய துடைத்து

கலைஞர் குறல் விளக்கம்  – ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் சுருதுகின்ற ஊக்கம் ஏற்படும்.

354. ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
        மெய்யுணர் வில்லா தவர்க்கு

கலைஞர் குறல் விளக்கம்  – உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

355. எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
        மெய்ப்பொருள் காண்ப தறிவு

கலைஞர் குறல் விளக்கம்  – வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்.

356. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
        மற்றீண்டு வாரா நெறி

கலைஞர் குறல் விளக்கம்  – துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்.

357. ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
        பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

கலைஞர் குறல் விளக்கம்  – உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்.

358. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
        செம்பொருள் காண்ப தறிவு

கலைஞர் குறல் விளக்கம்  – அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்.

359. சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
        சார்தரா சார்தரு நோய்

கலைஞர் குறல் விளக்கம்  – துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்.

360. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
        நாமங் கெடக்கெடு நோய்

கலைஞர் குறல் விளக்கம்  – விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்.

MUST READ