STR 49 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய அடுத்த மூன்று படங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி சிம்புவின் 49வது திரைப்படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கப்போவதாகவும் இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த படத்தில் நடிகர் சிம்பு, கல்லூரி மாணவனாக நடிக்கிறார் என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. அடுத்தது இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளார் எனவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மன்மதன், வல்லவன், வாலு, வானம், சிலம்பாட்டம் போன்ற படங்களுக்குப் பிறகு நடிகர் சந்தானம் இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகி வருகிறது. இவ்வாறு தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் STR 49 படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது.
அதன்படி தற்போது இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தற்போது ட்ரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வரும் சாய் அபியங்கர், STR 49 படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
ஏற்கனவே சாய் அபியங்கர், சூர்யா 45, பென்ஸ், அட்லீயின் புதிய படம் ஆகிய படங்களில் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.