கழுகு பட நடிகர் கிருஷ்ணாவின் 25ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் கிருஷ்ணா கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான அலிபாபா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர் இவர் கற்றது களவு, யாமிருக்க பயமேன், வல்லினம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதற்கிடையில் வெளியான ‘கழுகு’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அடுத்தது தனுஷின் மாரி 2, கௌதம் மேனனின் ஜோஸ்வா இமை போல் காக்க ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் கடைசியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான பாராசூட் என்ற வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்தது கிருஷ்ணா தன்னுடைய 25ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதன்படி தற்காலிகமாக KK 25 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை மனு மந்திரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இன்று (பிப்ரவரி 14) நடிகர் கிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம் தொடர்பான வச்சா அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.