குடும்பஸ்தன் திரைப்படம் வெற்றிகரமான 25வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் விக்ரம் வேதா, காலா ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் மணிகண்டன். அதன் பிறகு டிஜே ஞானவேல் இயக்கத்திலும் சூர்யாவின் நடிப்பிலும் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் மணிகண்டனின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு அவருக்கு சினிமாவில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது. இதன் பின்னர் குட் நைட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வெற்றி கண்டார் மணிகண்டன். அதன் பிறகு லவ்வர் திரைப்படமும் மணிகண்டனுக்கு வெற்றி படமாக அமைந்த நிலையில் குடும்பஸ்தன் திரைப்படத்தின் மூலமும் ஹாட்ரிக் ஹிட் கொடுத்துள்ளார் மணிகண்டன். அதாவது அறிமுக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்திருந்த திரைப்படம் தான் குடும்பஸ்தன். சினிமாக்காரன் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படத்தில் மணிகண்டன் தவிர குரு சோமசுந்தரம், சான்வி மேக்னா மற்றும் பலர் நடித்திருந்தனர். காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு பின்னணியில் வெளியான இந்த படத்தில் நடிகர் மணிகண்டன் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வருகிறார். அந்த வகையில் இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் இன்றுடன் (பிப்ரவரி 17) வெற்றிகரமான 25வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இது தொடர்பாக நடிகர் மணிகண்டன் தனது சமூக வலைதள பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று பதிவு ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.