ஆன்லைனில் முதலீடு செய்து மோசடியில் ஈடுபட்ட இரு மாநிலங்களைச் சேர்ந்த 4 சைபர் குற்றவாளிகளை இணையவழி குற்றப்பிரிவு, மதுரை மாவட்ட போலீசார் கைது செய்தனர். இதில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் ஆன்லைன் முதலீட்டில் அதிகலாபம் தருவதாக பொதுமக்களிடம் மோசடி செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி ஆம் தேதி மதுரையை சேர்ந்த ஒருவர் பேஸ்புக் மூலம் ஆன்லைன் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என வந்த விளம்பரத்தை நம்பி பணம் ரூ.52 லட்சத்து 66 ஆயிரத்து 417 ஐ இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளார். விளம்பரத்தை நம்பி அவர் சைபர்குற்றவாளிகள் அனுப்பிய பல்வேறு வங்கிகணக்குகளுக்கு பணத்தை அனுப்பியுள்ளார். இறுதியில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் தான் இழந்த பணத்தை மீட்டுத்தருமாறு கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கிற்காக தனிப்படை அமைக்கப்பட்டு பணம் அனுப்பிய பல்வேறு வங்கிகணக்குகளில் பணபரிவர்த்தனைகளை விசாரணை செய்தனர். விசாரணையில் சம்பந்தப்பட்டுள்ள ZERY என்ற ஸ்கிராப் நிறுவனத்தின் பெயரில் வங்கிக்கணக்கைத் திறந்த கேரளாவை சேர்ந்த அன்வர்ஷா, என்பவரை தனிப்படையினர் கைது செய்து அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கிகணக்கு புத்தகங்கள் ATM கார்டுகள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றகாவலுக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் விசாரணையில் சைபர் குற்றவாளிகளின் தொடர்பு கண்டறியப்பட்டு, மீண்டும் சிறப்புக்குழு கர்நாடகாவுக்குச் சென்றது. முக்கிய குற்றவாளியான சல்மான்கான், மற்றும் ஜூயர் உல்லாக்கான் ஆகியோரை கைது செய்தனர்.
சைபர்கிரைம் போலிசார் அவர்களிடமிருந்து 76 லட்சத்து 52 ஆயிரத்து 635 ரூபாயை முடக்கினர். பாதிக்கப்பட்டவருக்கு 4 லட்சத்து13 ஆயிரத்து199 ரூபாய் மட்டும் வழக்கில் சம்பந்தட்ட நபருடைய பணம் என தெரிய வந்தது. அதை போலிசார் திருப்பி அளித்துள்ளனர். மீதமுள்ள தொகை வேறு யாரிடமிருந்து சைபர் கிரைம் மூலமாக கொள்ளை அடிக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பணத்தை பாதிக்கப்பட்டவருக்கு திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது போன்ற பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் மற்றும் இதர சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்கவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.