நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு பவர் பாண்டி எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து தனது 50வது படமான ராயன் திரைப்படத்தை இயக்கினார். தற்போது தனது 52 வது படமான இட்லி கடை படத்தை தானே இயக்கி, நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் பவிஷ், அனிகா சுரேந்திரன் ஆகியோரின் நடிப்பில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், ரம்யா ரங்கநாதன், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க லியோன் பிரிட்டோ இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இப்படம் வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் ஏற்கனவே இந்த படத்திலிருந்து அடுத்தடுத்த பாடல்களும் ட்ரெய்லரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் மிகப்பெரிய கேமியோ இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது ஏற்கனவே கோல்டன் ஸ்பேரோ பாடலுக்கு நடிகை பிரியங்கா மோகன் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரைத் தவிர வேறு ஒரு பெரிய நடிகர் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அந்த நடிகர் யாராக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர். அதன்படி தனுஷ் இந்த படத்தில் கேமியோவாக நடித்திருக்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.