ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு கங்குவா திரைப்படம் உருவாகி இருந்த நிலையில் அதைத்தொடர்ந்து ரெட்ரோ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ள நிலையில் படமானது மே 1 அன்று திரைக்கு வர தயாராகி வருகின்றன. இதற்கிடையில் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜிகே விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, நட்டி நடராஜ், யோகி பாபு, சுவாசிகா, ஷிவதா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு பொள்ளாச்சி, சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது சென்னை அருகில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் வெளிச்சை கிராமத்தில் முறையான அனுமதி இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கிரேன்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவை சாலையில் நிரம்பி இருந்ததனால் அப்பகுதி மக்களுக்கும் படக்குழுவினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து காவல்துறையினர் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்துமாறு சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி ஆகியோருக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளதாகவும் புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.