டிராகன் படத்தின் திரைவிமர்சனம்.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டிராகன். அஸ்வத் மாரி முத்துவின் இயக்கத்திலும் லியோன் ஜேம்ஸின் இசையிலும் உருவாகியுள்ள இந்த படம் இன்று (பிப்ரவரி 21) திரைக்கு வந்துள்ளது.
பள்ளி பருவத்தில் நன்றாக படித்து கல்லூரிக்கு செல்லும் பிரதீப் ரங்கநாதன், ஒரு பெண் தன்னை அவமானப்படுத்துவதால் அடாவடித்தனமான மாணவனாக மாறி ஒழுக்கமீறல்களில் ஈடுபடுகிறார். அதன்படி படிப்பில் கவனம் செலுத்தாமல் 48 அரியர்களை வைக்கிறார். அதன் பிறகு கல்லூரியை விட்டு வெளியேறும் பிரதீப், லட்சக்கணக்கில் சம்பாதிப்பவனாக உருவெடுக்கிறார். பொருளாதார வீதியில் அசுரவேகத்தில் வளர்ந்து ருத்ர தாண்டவம் ஆடுகிறார் பிரதீப். இவ்வாறு அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் நிறைந்த டிராகன் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து புத்திசாலித்தனத்தை கையில் எடுத்துள்ளார். அதுதான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது பிரதீப் ரங்கநாதன் துருதுருவென்று துள்ளலான தனது நடிப்பை வெளிப்படுத்தி கெத்து காட்டியுள்ளார். டைமிங் டயலாக், காதல், எமோஷனல் என அனைத்திலும் இறங்கி அடித்துள்ளார். அதன்படி தன் ஹீரோ என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அதேபோல் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் இந்த கால இளைஞர்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் திரைக்கதையை கொண்டு சென்றுள்ளார். மேலும் அனுபமா, கயடு லோஹர் ஆகியோர் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளனர். அடுத்தது ஜார்ஜ் மரியானின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் வலுவாக இல்லை என்று தோன்றினாலும் கதை நகர நகர அந்த கதாபாத்திரம் படத்திற்கு பலம் சேர்த்திருப்பதை உணர முடிகிறது. மிஷ்கின், கௌதம் மேனன் வழக்கம்போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் விஜே சித்து, ஹர்ஷத் கான் ஆகியோர் தங்களுக்கான பொறுப்பை உணர்ந்து நடிப்பில் அசத்தியுள்ளனர். பின்னணி இசை, ஒளிப்பதிவு போன்ற மற்ற தொழில்நுட்ப பணிகளும் படத்தின் தரத்தை உயர்த்தி இருக்கிறது. அடுத்தது படத்தில் வரும் கேமியோக்கள், கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ஆகியவை அருமை.
இருப்பினும் படத்தில் இடம்பெற்ற ஆபாச வார்த்தைகள், கிளாமர் காட்சிகளை குறைத்திருந்தால் அனைத்து வயது ரசிகர்களும் படத்தை என்ஜாய் பண்ணலாம். மொத்தத்தில் கல்லூரி வாழ்க்கை என்பது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நகைச்சுவை கலந்த திரைக்கதையில் சொல்லி இருப்பதோடு திருப்தி அடைய வைத்துள்ளது. எனவே ‘டிராகன்’ – ‘ஃபயரான டிராகன்’.