வள்ளுவர் கோட்டத்தில் பேராசிரியர் சுப.வீ அவர்களின் தலைமையில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் கண்டன உரையாற்றினாா்.மேலும் இது குறித்து அவர் பேசுகையில், ”தமிழ்நாடு முதல்வர் ஒன்றிய பாஜகவிற்கு செயல் மூலம் பதில் அளித்து வருகிறார். இதிகாசங்கள் மூலம் நம்மை அடிமையாக்கிய சமூகங்களுக்கு இன்று தமிழரின் தொன்மை குறித்து உலகத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளார்.
காசி தமிழ் சங்கம் என்பது தமிழர்களை ஏமாற்றும் வேலையாகும். தமிழ் மொழியை சமஸ்கிருதத்திற்கு கீழாக வைக்க வேண்டும் என அடிப்படையில் தான் இன்று திட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஒடிசா மக்களிடம் தமிழர்கள் திருடர்கள் என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி கூறி வாக்குகளை பெற்றார். அதே ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தான் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். அவர் தற்போது தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி வழங்குவோம் என்று கூறுகிறார்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு நேரான கொள்கை எதிரி திமுக தான். திராவிட மாடல் ஆட்சி இங்கு பெரியார் வழியில் நடைபெற்று வருகிறது. அவர்களின் சதி வேலையை பெரியாரின் கண்ணாடி மூலமாக பார்த்து முறியடித்து வருகிறோம். புதுச்சேரி மாநிலத்தில் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டனர். இதன் காரணமாக புதுச்சேரி பல்கலைக்கழகம் தரவரிசை பட்டியலில் 16 வது இடத்தில் இருந்து 100 இடங்களுக்கு கீழாக இறங்கி சென்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் 100 பல்கலை கழகத்தில் 38 பல்கலைக்கழகம் முதல் 100 பல்கலைக்கழக வரிசையில் உள்ளது.
நவீன முறையில் தரமற்ற கல்விக் கொள்கை திணிக்க தான் ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. பல்வேறு வகையில் மும்மொழிப் கொள்கையை தமிழகத்தில் தினைக்க பார்க்கிறார்கள். நாம் பெரியாரின் பேரன்களாக அதை ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும். தமிழகத்தில் என்றும் தாமரை மலர வாய்ப்பே இல்லை. தேசிய கல்விக் கொள்கை மூலம் இடைநிறுத்தலை அதிகப்படுத்தி அதன் மூலம் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த திட்டம் கொண்டு உள்ளனர்” என கூறியுள்ளாா்.
மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்- கோலமிட்டு இல்லத்தரசிகள் எதிர்ப்பு!