”நாம் தமிழர் கட்சியில் இருப்பதா? கட்சியை விட்டு வெளியே போய் வேற இடத்தில் சேர்ந்து இயங்குவதா? என்பதை முடிவெடுக்கிற உரிமை காளியம்மாளுக்கு தான் இருக்கிறது” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி, மணப்பாட்டில் மார்ச்- 3ம் தேதி திமுக -காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கும் நிகழ்ச்சி அழைப்பிதழில் நாதகவின் காளியம்மாளின் பெயர் சமூக செயற்பாட்டாளர் என இடம்பெற்று உள்ளதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக காளியம்மாள் உள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்நாம் தமிழர் கட்சியில் இருந்து விலக உள்ளது குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாக காளியம்மாள் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் காளியம்மாள் விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ”கட்சியில் முழு சுதந்திரம் இருக்கிறது. இருந்து இயங்குவதற்கும், விருப்பமில்லை என்றால் வெளியேறுவதற்கும் முழு சுதந்திரம் இருக்கிறது. இது ஒரு ஜனநாயக அமைப்பு. முதலில் சமூக செயற்பாட்டாளராகத்தான் தங்கச்சி இருந்தாங்க. அவங்கள அழைச்சிட்டு வந்தது நான்தான்.
இன்றைக்கு எல்லோருக்கும், எல்லா சுதந்திரமும் இருக்கிறது. இங்கே பக்கத்தில் இருப்பவர்கள் கூட வேறு ஒரு அமைப்பில் சேர்ந்து இயங்க வேண்டும் என்று சென்றால் போகலாம். வரும்போது வாங்க.. வாங்க… வணக்கம். ரொம்ப நன்றி என்று சொல்லுவோம். போறதாக இருந்தால், போங்கள்… ரொம்ப ரொம்ப நன்றி. வாழ்த்துக்கள்..! என்று சொல்வோம். இதுதான் எங்களுடைய கொள்கை.
உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்… பருவ காலங்களில் இலையுதிர் காலம் என்று ஒன்று இருக்கும். அதேபோல் எங்கள் கட்சிக்கு கலையுதிர் காலம் இன்று வந்திருக்கிறது. அதனால் வருவார்கள், போவார்கள். வெளியில் சென்றால் உங்களை மாதிரி ஆட்கள் பேட்டி எடுத்து போடுவதால் விளக்கம் கொடுத்து விலகுகிறேன் என்று பதில் அளித்துவிட்டு செல்கிறார்கள். உடனே நீங்கள் பேட்டி எடுத்து போடுவதால் அதை நாங்கள் கேட்பதற்கு, பார்ப்பதற்கு, ரசிப்பதற்கு நல்லா தான் இருக்கிறது. எடுத்துப் போடுங்கள்.
தங்கச்சிக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. கட்சியில் இருப்பதா? கட்சியை விட்டு வெளியே போய் வேற இடத்தில் சேர்ந்து இயங்குவதா? என்பதை முடிவெடுக்கிற உரிமை அவருக்கு இருக்கிறது. அதில் ஒன்றும் நாம் கருத்து சொல்ல முடியாது” என தெரிவித்துள்ளார்.