சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த போட்டி பிப்ரவரி 23 ஆம் தேதி இன்று துபாயில் நடைபெற உள்ளது. இருப்பினும், சமூக ஊடகத்தில் பரபரப்பான அபே சிங் என்றும் அழைக்கப்படும் ஐஐடி பாபாவின் துணிச்சலான கணிப்பு இந்திய ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“இந்த முறை இந்தியா வெற்றி பெறாது,” என்று ஐஐடி பாபா அறிவித்திருக்கிறார். பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட பிறகு புகழ் பெற்ற ஐஐடி பாபா, சமீபத்தில் வரவிருக்கும் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.. ‘அன்பிட் கேம்ஸ்’ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நேர்காணலின் போது அவர் தெரிவித்த கருத்து ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐஐடி பாபா வைரலான வீடியோவில் ‘நான் இதை முன்பிருந்தே சொல்லி வருகிறேன். இந்த முறை இந்தியா வெற்றி பெறாது.விராட் கோலி உள்ளிட்ட அனைவரையும் தங்கள் சிறந்த முயற்சிகளை எடுத்து வெற்றி பெறச் சொல்லுங்கள்.அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். இப்போது கடவுள் பெரியவரா? அல்லது நீங்கள் பெரியவரா என்பதைப் பார்ப்போம். இந்த முறை நான் அதற்கு நேர்மாறாகச் செய்திருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். அவரது கணிப்பால் ரசிகர்கள் கோபமடைந்து சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்வினைகளை அளித்தனர்.
”போட்டியை வென்ற பிறகு பேசுவோம்” என பல ரசிகர்கள் கூறி வருகின்றனர். சில ரசிகர்கள் அவரை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள் என கடுப்பாகி வருகின்றனர். ஒரு ரசிகர், ‘அவர் கர்மாவை நம்புகிறார். நாங்கள் ரோஹித்’ சர்மாவை நம்புகிறோம்’ என்று கூறியுள்ளார்.
ஐ.சி.சி-யில் துபாயில் நடந்த இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒருநாள் போட்டிகளில், இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.இந்திய அணி துபாய் மைதானத்தில் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்தது. துபாயில் நடந்த 22 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் 8 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது தவிர, இந்த மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையே இரண்டு ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. அதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
ஐ.சி.சி போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே 21 போட்டிகள் நடந்துள்ளன. அதில் இந்தியா 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, பாகிஸ்தான் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆகவே ஐ.சி.சி போட்டிகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.