ஐரோப்பிய நாடுகளில் உள்ள கல்வி முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தி இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை அமல்படுத்த மத்திய பாஜக அரசும், தமிழக பாஜக தலைவர்களும் வலியுறுத்துவதன் பின்னணி குறித்து பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது :- இந்தி மொழி சமீபத்தில் தோன்றிய மொழியாகும். இந்திக்கு முன்பாக இருந்த மொழி என்பது ஹிந்துஸ்தானி ஆகும். முகலாய பேரரசர் அக்பர் ஆட்சிக்காலத்தில் ஹிந்துஸ்தானி மொழி பயன்பாட்டில் இருந்தது. இந்தியாவை பிரித்தாளுவதற்கு பிரிட்டிஷ் செய்த சூழ்ச்சியில் உருவானதுதான் இந்தி. ஹிந்துஸ்தானி மொழியோடு, பாரசீக மொழி கலந்து உருது உருவானது. ஹிந்துஸ்தானி உடன் சமஸ்கிருதம் இணைந்து இந்தி உருவாகியது. உருதுவை இஸ்லாமியர்களின் மொழியாகவும், இந்தியை இந்துக்களின் மொழியாகவும் அடையாளப்படுத்தும் சூழ்ச்சியை பிரிட்டிஷ்காரர்கள் செய்தார்கள். 1857ஆம் ஆண்டில் ஜான்சிராணி, தாந்தியா தோபே போன்ற பல்வேறு சமயங்களை சார்ந்தவர்கள் இந்தியாவின் மிகவும் பலவீனமான அரசராக இருந்த கடைசி முகலாய பேரரசர் பகதூர் ஷாவை, இந்தியாவின் சக்ரவர்த்தியாக அறிவித்தனர். வெளிநாட்டில் இருந்து வந்த மதத்தை சேர்ந்த ஒருவரை இந்தியாவின் சக்ரவர்த்தியாக ஜான்சி ராணி, தாந்தியா தோபோ போன்றோர் அறிவிக்கின்றனர் என்றால் இவர்கள் தங்களை மண்ணின் மைந்தர்களாக நினைக்கிறார்கள். அப்படி இருக்கும் வரை நாம் இந்தியர்களை ஆள முடியாது. எனவே இவர்களை பிரிக்க வேண்டும்.
அப்படி பிரிப்பதற்காக கூறு போட்டதுதான் வங்கப்பிரினை. மக்கள் நான் வங்காளி என எதிர்த்து நின்றபோதுதான் 1911ல் வங்கப் பிரிவினையை திரும்ப பெற்றார்கள். வங்காள மக்களின் போராட்டம் உருவாக்கியது தான் சுதேசி இயக்கம். பின்னர் அதனை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டது. இதேபோல், வங்கதேசம் என்பது, வங்க மொழிக்காக உருவான ஒரு நாடு ஆகும். பாகிஸ்தான் தனது உருது மொழியை திணித்தபோது, வங்கதேச மக்கள் தங்கள் வங்காள மொழிக்காக போராடினார். டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பிப்ரவரி 21ஆம் தேதியை தான் உலக தாய்மொழி தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
மொழி என்பது என் கண்ணியத்திற்கான உத்தரவாதமாகும். என் மொழியை நான் பேசும்போது என் பண்பாட்டை காத்துக்கொள்கிறேன். உனக்கு பண்பாடே இல்லை என்பதை சொல்வதற்காக உருவாக்கியதுதான் இந்தி. பாஜக அதில் மிகவும் தெளிவாக இல்லை. இந்தியை ஒரு ஊடகமாக பயன்படுத்துகிறார்கள். தவிர இந்தி மீது பாஜகவுக்கு எந்த காதலும் இல்லை. இதனை நிரூபிக்க சரியான ஆவணம் தேசிய கல்வி கொள்கை 2020 ஆகும். அதில் என்ன சொல்கிறார்கள் என்றால், இந்தியாவின் மொழிகளை உருவாக்குவதில், இந்திய பண்பாட்டு வளர்ச்சியில் அளப்பெரிய பங்களிப்பு செய்தது சமஸ்கிருதம். எனவே சமஸ்கிருதத்தை அனைத்து நிலைகளிலும் கற்றுத்தருவதற்கான அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் நாம் உருவாக்கி தர வேணடும் என்கிறார்கள். இது இந்தி மொழிக்கு பொருந்து. தமிழ் வளர்வதற்கு எப்படி பொருந்தும்? ஏன் என்றால் தமிழில் வேர்ச்சொல் இருக்கிறது. ஆங்கிலத்தில் பல சொற்களுக்கு வேர்ச்சொல் கிடையாது. ஆனால் தமிழுக்கு அப்படி கிடையாது. தமிழில் காரணப் பெயர்களாக பல பெயர்கள் உள்ளன. வேர் சொல் இருக்கிறது. தனித்து நிற்கும் வல்லமை கொண்டது. அப்படிபட்ட பெருமை கொண்ட ஒரு மொழியை அழித்துவிட்டு, பிரிட்டிஷ்காரின் ஏவலாக உருவாகிய ஒரு மொழியை ஏற்றுக்கொள் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்.
பாஜக இன்னும் காலனிய மனப்பான்மை, அடிமை மனப்பான்மையில் இருந்து வெளிவரவில்லை. எங்கள் தாய்மொழியில் படிக்க சமமான கல்வியை கொடுங்கள் என்றால் அதை பேசாமல் ஐரோப்பாவை பற்றி, அமெரிக்காவை பற்றி ஏன் பேச ஆரம்பிக்கிறீர்கள். இந்த நாட்டின் பெருமையை பேசுங்கள். பாஜகவும், ஆர்எஸ்எஸ்ம் இன்னும் ஹிட்லர், முசோலினியின் கருத்தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை. இன அழிப்பிற்கு அடிப்படை மொழி. மொழி அழியாமல் இனம் அழியாது. எனவே இனத்தை அழிப்பதற்கு மொழியை அழிக்க வேண்டும் என்ற ஐரோப்பாவில் உருவான பாசிச சித்தாந்தத்தில் இருந்து இன்னும் விடுபடாமல் இருக்கிறார்கள்.
ஐரோப்பாவில் மும்மொழி கொள்கை உள்ளபோது தமிழ்நாட்டில் ஏன் அமல்படுத்தக் கூடாது? என்று பாஜகவினர் கேள்வி எழுப்புகிறார்கள். ஐரோப்பாவில் கட்டணம் இல்லா கல்வியை கொடுக்கிறார்களே அது குறித்து மட்டும் பேசாதது ஏன்? எந்த நாட்டிற்கு சென்றாலும் அரசு தனது பொறுப்பில் கல்வியை கொடுக்கிறதே அதை பேசாதது ஏன்? ஜெர்மனியில் பிறந்த ஒரு குழந்தை, ஜெர்மன் மொழியில் தான் தொடக்கக் கல்வியை கற்கின்றனர். பிரெஞ்சு மொழிக்காக ஜோன் ஆஃப் ஆர்க் செய்த தியாகம் தான் பிரான்ஸ் என்ற நாட்டை உருவாக்கியது. இங்கிலாந்திற்குள் ஸ்காட், ஐரிஷ் மொழிகள் உள்ளன. ஆனால் எங்கேயும், யார் மீதும் மொழியை திணிக்கக் கிடையாது. ஐரோப்பாவில் எல்லா நாடுகளும் கல்வியை அடிப்படை உரிமையாக வைத்துள்ளன. ஆனால் இந்தியாவில் மட்டும்தான் கல்வியை அடிப்படை உரிமையாக கொடுக்கவில்லை. அரசுப்பள்ளிகளும் இருக்கும், தனியார் பள்ளிகளும் இருக்கும், அரசுப்பள்ளிகளில் பி.எம். ஸ்ரீ பள்ளிகள் என்கிற தகைசால் பள்ளிகளும் இருக்கும் என்ற பாகுபாடு கொண்ட கல்வி அமைப்பு ஐரோப்பாவில் கிடையாது.
மொழிக் கொள்கையில் தமிழ்நாடு மிகவும் தெளிவாக உள்ளது. எங்கள் தாய்மொழியில் நாங்கள் படிக்கிறது. இங்கு தமிழ்நாடு அரசிடம் தெலுங்கு பயிற்று மொழி பள்ளிகள் உள்ளன. உ.பி.யில் அப்படி பார்க்க முடியும். உருது, கன்னட பயிற்று மொழிகளும் உள்ளன. அப்போது இங்கு யாருடைய மொழியை படிப்பதற்கும் தடை செய்யவில்லை. தமிழ்நாடு தமிழ் கற்றல் மொழி சட்டம் – 2006 இங்கே அமலில் உள்ளது. கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் ஜெயலலிதா ஆட்சியில் 2012ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. அந்த சட்டத்தில் பகுதி ஒன்று தமிழ் மொழி கட்டாயம். பகுதி 2 ஆங்கிலம் கட்டாயம். பகுதி 3, கணிதம், அறிவியல், சமூக அறிவியல். பகுதி 4-ல் யாருக்கு தாய்மொழி தமிழோ, ஆங்கிலமோ இல்லையோ? அவர்கள் அவர்களது தாய் மொழியை படிக்கலாம். இது அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகள், சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்துப்பள்ளிகளுக்கும் பொருந்தும். ஐரோப்பாவில் உள்ளதாக சொல்லப்படுவதை நடைமுறைப்படுத்தி இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. இந்த முறைதான் ஐரோப்பாவில் உள்ளது. மொழிக்கொள்ளை விவகாரத்தில் தமிழ்நாடு தெளிவான கொள்கையை வைத்திருக்கிறது. நாம் கேட்பது அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்வது. நாம் 100 வருடங்களாக குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தாகிவிட்டது. இப்போது பள்ளிகளில் சமமான கற்றல் வாய்ப்பை கொடுங்கள் என்பதுதான் இன்றைக்கு இருக்கின்ற போராட்டம்.
கேந்திர வித்யாலயா பள்ளிகள் என்பது சிறப்பு பள்ளிகள். மத்திய அரசுப்பணிகளில் பணிபுரிவோரின் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டவை. அந்த பள்ளிகளில் படிப்பவர்கள் மத்திய அரசு பணியாளர்களின் குழந்தைகள். கே.வி. பள்ளிகளிலும் தொடக்கக்கல்வியில் இந்தி, ஆங்கிலம் என இரு மொழிதான் உள்ளது. அங்கேயும் தொடக்கக் கல்வியில் தாய் மொழி கற்பிக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள கே.வி. பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் கிடையாது. சம்பளமும், இந்தி ஆசிரியர்களை விட குறைவுதான். நாடாளுமன்றத்தில் 2 பட்ஜெட்டுகளுக்கு முன்பாக இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஆசிரியர்களை நியமிக்க 50 கோடி நிதி ஒதுக்கினீர்கள். சமஸ்கிருதத்திற்கு மட்டும் அந்த காலகட்டத்தில் எவ்வளவு செலவாகி இருந்தது என்றால் 622 கோடி. ஆனால் மற்ற மொழிகளுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. கற்றுக்கொள்ள எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் இருக்கிறது என சொல்லிவிட்டு, ஆனால் ஆசிரியர் இந்தி டீச்சர்தான் கொடுப்பேன் என்பது சரியானதா? ஒரு பள்ளியில் நுழையும்போது அங்கு என்ன மொழிக்கான ஆசிரியர் இருக்கிறாரோ? அந்த மொழியைதான் நான் கற்றுக்கொள்ள முடியும்.
எனவே வாய்ப்பு நிறைய உள்ளதாக கூறி மும்மொழி கொள்கையை என்னை ஏற்கவைத்துவிட்டு, பின்னர் இந்த மொழிக்கான ஆசிரியர் தான் இருக்கிறார். இதனை படித்தால் என்ன என்று சமாதானம் செய்வார்கள். நேர்மையான வாதம் என்பது அனைத்துப் பள்ளிகளுக்கும் சமமான கற்றல் வாய்ப்புகளை வழங்க வேண்டும். அரசின் பொறுப்பிலும் செலவிலும் கொடுக்க வேண்டும். அதற்கு முன்வருவது என்பதுதான் அரசமைப்பு சட்டத்தின்படி ஒரு கல்விகொள்கையாக இருக்க முடியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.