இன்னும் 4 நாட்களில் (மார்ச்.3ம் தேதி) 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், அதனை தொடர்ந்து 11, மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது. அதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்..மேலும் இது குறித்து, ” தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச்.3ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தாண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 8,21, 057 மாணவர்களும், தொடர்ந்து நடைபெறவுள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 9,13, 036 மாணவர்களும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8,23,261 மாணவர்கள் என 10, 11, 12 பொதுத்தேர்வை தமிழகம் முழுவதும் மொத்தம் 25, 57, 354 மாணவர்கள் எழுத உள்ளனர்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 7,518 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் எழுத உள்ளனர். இவர்களுக்காக 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வை கண்காணிக்க 43,446 கண்காணிப்பாளர்களும், 4,470 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் வசதிக்காக கடந்த ஆண்டைவிட தேர்வு மையங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு மையங்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக எந்த தொய்வுமின்றி கிடைப்பதற்கு அனைத்து துறைகளும் இணைந்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்பு குழுக்கள் மாவட்டங்களில் அமைக்கப்பட்டு தேர்வுக்கு முழுவீச்சில் பள்ளிக்கல்வித்துறை தயாராகி உள்ளது.
பொதுத் தேர்தல் நடத்துவது போல இந்த பொது தேர்வை Error free தேர்வாக நடத்துவதற்கு பல்வேறு கட்டங்களில் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ள பள்ளி கல்வித்துறையின் அரசு தேர்வுகள் இயக்ககம், வியாழன் மாலைக்குள்ளாக(பிப்.27) 100% பணிகளும் முழுமையாக முடிவடைந்து அனைத்து மையங்களும் பொதுத் தேர்வுக்கு தயார் நிலைக்கு வந்துவிடுமென தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தேர்வு நேர மன அழுத்தம் தவிர்க்க பள்ளிகள் அளவிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறையின் 14417 உதவி எண்ணை எந்நேரத்திலும் மாணவர்கள் தொடர்பு கொண்டு அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் மன குழப்பங்களுக்கும் தீர்வுகள் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.”
4 நாட்களில் பொது தேர்வு துவங்க உள்ளதால் மாணவர்கள் பதட்டம் அடையாமல் பொறுமையாக அனைத்து பாடங்களையும் கற்க வேண்டும் எனவும், மாதிரி தேர்வுகளில் வாய்ப்புகளில் விடுபட்ட கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கும்பொழுது பொது தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இது குறித்து கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி கூறுகையில், ”மாணவர்களுக்கு அவர்களில் பள்ளிக்காலத்தில் மிகவும் சவாலானது இந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு. மாணவர்கள் ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியதால் இதைக்கண்டு பயப்படத்தேவையில்லை. தன்னம்பிக்கை உடன் எழுதுங்கள் இந்த மதிப்பெண் மாணவர்களுக்கு முக்கியமானது. கடைசி நேரத்தில் புதிதாக எதையும் படிக்காமல் ஏற்கனவே படித்தவற்றை தொகுத்து படியுங்கள் அது உங்களை மேலும் நம்பிக்கை அளிக்கும். தேர்வுக்கு முந்தைய நாள் 6-7 மணி நேரம் நன்கு உறங்க வேண்டும். நள்ளிரவு வரை படித்தால் தலைவலி உண்டாகலாம். எனவே தலைவலி இல்லாமல் மன நிறைவுடன் தேர்வெழுதுங்கள். தேர்வு எழுதிய அன்றே அன்றைய தேர்வு குறித்து ஆலோசிக்க வேண்டாம். கடைசி நேரத்தில் பள்ளிக்கு செல்வதை தவிர்க்கலாம். கடைசி 30 நிமிடம் யாரிடமும் பேசாமல், நன்கு தெரிந்த பாடத்தை மீண்டும் படியுங்கள். எனக்குத் தெரிந்த பாடம் நன்றாக மனதில் பதிந்திருகின்றது என்ற நேர்மையான எண்ணங்களாக மனதில் உருவாக வேண்டும்” என கூறியுள்ளாா்.