ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் நடந்த காங்கிரஸ் விசுவாசி இளம்பெண் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஹிமானியை அவரது காதலனே கொலை செய்துள்ளார். சம்பவத்திற்குப் பிறகு அவர் டெல்லிக்கு தப்பிச் சென்றார். குற்றம் சாட்டப்பட்ட காதலனை டெல்லியைச் சேர்ந்த போலீசார் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், கொலையாளி கொலைக் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். கொலை பற்றியும் அவர் கூறியுள்ளார். விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் ஹிமானியுடன் நீண்ட காலமாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினரின் முன்னிலையில், குற்றம் சாட்டப்பட்ட சச்சின், தன்னை ஹிமானியின் காதலன் என்று தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், மிரட்டல் விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சச்சின், ஹிமானிக்கு நிறைய பணம் கொடுத்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இருந்போதும், ஹிமானி மீண்டும் மீண்டும் அதிக பணம் கேட்டுக் கொண்டு இருந்துள்ளார். சச்சின் ரோஹ்தக்கில் வசிப்பவர்.
சம்பவம் நடந்து 36 மணி நேரத்திற்குப் பிறகு ரோஹ்தக் போலீசார் டெல்லியில் இருந்து குற்றவாளியை கைது செய்தனர். சச்சின், ஹிமானி நர்வாலை அவரது வீட்டிற்குள்ளேயே கொலை செய்துள்ளார். ஹிமானி விஜயநகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரது தாயார் மற்றும் சகோதரரும் அவருடன் வசித்து வந்தனர். ஆனால் சம்பவம் நடந்த அன்று, அவர்கள் இருவரும் நஜாஃப்கருக்குச் சென்றிருந்தனர். ஹிமானி வீட்டில் தனியாக இருந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட சச்சின், ஹிமானியை அவரது வீட்டிற்குள்ளேயே கொலை செய்து, பின்னர் அவரது உடலை ஒரு சூட்கேஸில் வைத்து அடைத்து வீட்டிலிருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலம் அருகே வீசினார்.
ஹிமானி நர்வால் காங்கிரஸ் கட்சித் தொண்டர். அவர் சட்டம் படித்துக் கொண்டிருந்தார். 2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் ஹிமானி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தார். குடும்ப உறவுகள் இதுகுறித்து, ”ஹிமானியின் திருமணத்திற்காக ஒரு பையன் தேடப்பட்டு வந்தான். இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள ஹிமானி திட்டமிட்டு இருந்ததாக கூறுகிறார்கள். இந்நிலையில், காவல்துறையினரின் ஆரம்ப விசாரணையில், ஹிமானியின் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கொலையாளி அவளுடைய காதலன் என்பது தெரியவந்துள்ளது.