Homeசெய்திகள்கட்டுரைவிவகாரம் முடியாது! சீமானுக்கு தான் சிக்கல்... ஏன்னா? அப்படியே நடந்ததை சொல்லவா?

விவகாரம் முடியாது! சீமானுக்கு தான் சிக்கல்… ஏன்னா? அப்படியே நடந்ததை சொல்லவா?

-

- Advertisement -

நடிகை பாலியல் புகாரை சீமான் முறையாக கையாளவில்லை, அவருக்கு சிக்கல் இன்னமும் முடியவில்லை என்றும் நாம் தமிழர் கட்சி முன்னாள் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார்.

நடிகை பாலியல் விவகாரம் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி காளியம்மாள் விலகியது குறித்து அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி ஜெகதீச பாண்டியன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- நடிகை விவகாரத்தை கையாளுவதில் சீமான் தவறு செய்துவிட்டார். அவர் யாரையும் நம்பவில்லை என்பதுதான் அதற்கான காரணம். ஜெயலலிதாவிடம் சீமான் கூறிய பின்னரே நடிகை தனது பாலியல் புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகிறது. ஆனால் சீமான் ஜெயலலிதாவை சந்தித்தபோது எழுவர் விடுதலை குறித்தும், ஈழப்பிரச்சினை குறித்தும் தான் பேசப்பட்டது. 2026ல் பெண்களுடைய வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்காது. தேர்தல் நேரங்களில் மட்டும் நடிகை பாலியல் விவகாரத்தை எழுப்பி பிரச்சினை செய்து வருவதாக கூறுகிறார். ஆனால் இவ்வளவு தூரம் செல்லவே விட்டிருக்கக்கூடாது. இந்த பிரச்சினையை முதலிலே பேசி முடித்திருக்க வேண்டாமா? அவர் நடிகையுடன் பேசவே இல்லை.

நடிகை கேட்டார் என்பதற்காக பணம் வழங்கினேன் என்கிறார். விக்னேஷ் என்கிற டிப்ளமோ படிக்கும் மாணவர், காவிரி நீர் பிரச்சினைக்காக தீக்குளித்து இறந்து விட்டார். அவர் குடும்பத்திற்கு இந்த காசை நீங்கள் கொடுக்கவில்லையே. பேராவூராணியில் திலீபன் என்ற சகோதரர் அரசாங்க வேலையை விட்டுவிட்டு வந்து தமிழ் தேசிய அரசியலில் சீமானோடு பயணித்தார். அவருக்கு இதய அறுவை சிகிச்சைக்காகவும், மருத்துவ செலவுகளுக்காகவும் வெளிநாடுகளில் இருந்து  லட்சக்கணக்கான தொகையை அனுப்பினார்கள். ஆனால் அந்த தொகையை அவருக்கு வழங்கவில்லை. இன்று அவர் அதிமுகவில் சேர்ந்து நல்லபடியாக உள்ளார்.  ஐபிஎல் போராட்டத்தின்போது 63 பேர் கைது செய்யப்பட்டனர். இடும்பவனம் கார்த்தி மீது குண்டர் சட்டம் போட்டனர். அன்றைக்கு இதுபோல வழக்கறிஞர்களை திரட்டி போராடாவில்லையே.

உங்களுடைய தனிமனித பிரச்சினைக்காக கட்சியினரை வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றது எந்த வகையில் நியாயம். மற்றவர்களுக்கும் இதேபோல் செய்ய வேண்டும் அல்லவா? இப்போது இந்த வழக்கை நடத்தக்கூடாது என்பதற்காக உச்சநீதிமன்றத்திற்கு செல்கிறீர்கள். யாரை வைத்து நீங்கள் உச்சநீதிமன்றத்திற்கு செல்வீர்கள் என்று தெரியாதா? ஏற்கனவே நீங்கள் பாஜகவில் ஐக்கியம் ஆகிவிட்டீர்கள். எங்களை எல்லாம் கூறுகட்டி விற்றுவிட்டீர்கள் என்று சொல்கிறோம். நாம் தமிழர் கட்சி ஐ.டி.விங், எங்களுடைய தகவல்களை எல்லாம் பாஜக ஐ.டி. விங்கிற்கு லிங் செய்துவிட்டனர். அவர்கள் பிரபாகரன் படம், மைக் சின்னத்தை வைத்துக்கொண்டு அவதூறாக பதிவிடுகிறார்கள். சீமானே போன் செய்து பதிவிடுங்கள் என்று சொல்கிறார்.

மணிவண்ணன் தன்னிடம் உதவியாளராக இருந்த சீமானை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக்கொண்டார். அவருக்கு இருக்கும் மனப்பக்குவம், மன வலிமை சீமானுக்கு கிடையாது. எங்களை அங்கீகரிப்பது கிடையாது. நாங்கள் இவ்வளவு தூரம் அவருடன் பயணப்பட்டு வந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் பயம் வந்துவிடுகிறது. அதன் விளைவுதான் கல்யாண சுந்தரம் வெளியே போனது. ராஜிவ்காந்தியை வெளியே அனுப்பியது. நாம் தமிழர் கட்சியை அழித்ததில் பெரும்பங்கு சாட்டை துரைமுருகனுக்கு தான் உள்ளது. உங்கள் கட்சியை விட்டு போகிறேன் என்று சொல்லிவிட்டு டிடிவி தினகரனின் கட்சியில் சேர முயற்சித்தார். வெற்றிக்குமரன்தான் அவரை பேசி மீண்டும் கட்சிக்கு அழைத்து வந்தார். அப்போது உளவுத்துறை மண்டையை கழுவி, நாம் தமிழர் கட்சிக்குள் இருந்துகொண்டு எப்படியாவது கட்சியை காலி செய்துவிடு என்று சொல்லியுள்ளனர். எல்லாருடனும் அவர் தொடர்பில் உள்ளார். நாங்கள் கட்சியை சரிசெய்ய வேண்டும் என்று ஆதங்கத்தில் போட்ட பதிவுகளை எல்லாம் சீமானிடம் சென்று போட்டுக்கொடுத்தார்.

தன்னுடைய மனைவிக்கு தாலி செய்து கொடுத்தவரின் குடும்பத்தின் தாலியை அறுத்தவர்தான் சாட்டை துரைமுருகன். அதை காப்பாற்றி விட்டவர் வெற்றிக்குமரன். கட்சியின் அரசியலை மாலைநேர இலக்கிய கல்லூரியாக இருந்ததை ஆபாசமாக பேசியதே இவர்தான். தனக்கு போட்டியாக வந்துவிடுவார் என்றுதான் ராஜிவ்காந்தி, கல்யாணசுந்தரம் போன்றோரை வெளியேற்றினார். இப்போது காளியம்மாள். 2 ஆண்டுகளுக்கு முன்பே அவரை வெளியேற்ற சொன்னார். நாங்கள் பேசி சமரசம் செய்தோம். நாம் தமிழர் கட்சியில் பேச்சாளர்கள்தான் கட்சியின் முகமாக அறியப்படுவார்கள். அவர்களுக்கு கைத்தட்டு வந்தால், ஒரு பயம் வந்துவிடுகிறது. இவர்தான் காளியம்மாளை, குல தெய்வம் என்றார். பின்னர் அவரே பிசிறு என்றார். காளிம்மாள் தொடர்பான ஆடியோவை வெளியிட்டவர் துரைமுருகன்தான்.

என்றைக்கு பெரியாரை ஒழிப்பது தான் தன்னுடைய முதல் கடமை என்று சொன்னாரோ, அன்றே கட்சியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துவிட்டேன். பிரபாகரன், பெரியார் உள்பட யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. ஆனால் பெரியாரை ஒழிப்போம் என்று சொல்கிறபோதுதான் நான் அது அவரது தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்து அல்ல என்று கூறுகிறேன். அன்று எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் இன்று பலரும் கட்சியை விட்டு வெளியேறி விட்டனர். நாதக கட்சியை ஆரம்பித்தவர்களில் நானும் ஒருவன். இது அவரது கொள்கையும் இல்லை என்றைக்கு அவர் குருமூர்த்தி, கோபால்ஜியை சந்தித்துவிட்டு வந்த பிறகு அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. ஈழப்பிரச்சினைக்காக அமித்ஷா, மோடியை சந்தித்தால் கூட பரவாவில்லை. ரஜினியை சந்தித்துவிட்டு வந்த பின்னர் சங்கி என்றால் தோழர் என்று சொல்கிறார். அதை பார்த்துதான் சீமானின் சொந்த கருத்தா? என்கிறார். பெரியாரா? பிரபாகரனா? என்று சொன்னபோதுதான் கட்சியை விட்டு வெளியேறினான். தமிழ்தேசிய விடுதலையை வென்று எடுக்க பிரபாகரனையும் பெரியாரையும் மோத விட்டீர்கள் பாருங்கள். இது சங்கிகள் கூட செய்யாத வேலை. பிரபாகரன், தமிழ்நாட்டு, இந்திய அரசியலில் தலையிட்டதே கிடையாது. அவர்களே இதனை விரும்பவில்லை. 2009 இன அழிப்புக்கு பின்னர் பல்வேறு அமைப்புகளில் இருந்து வீருகொண்ட இளைஞர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களில் இன்று எத்தனை பேர் நம்மிடம் உள்ளார்கள். உங்களது பிம்பம் உடைக்கப்பட்டு எல்லோரும் சென்றுவிட்டார்களா அல்லவா?

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் ஈரோட்டில் பிரச்சாரம் செய்வதற்கு எதிர்ப்பு

காளியம்மாளை எவ்வளவு கேவலமாக எழுதுகிறார்கள் பாருங்கள். நான் கடிதத்தில் சீமானையும், அவரது நிர்வாகத்தையும் குறை சொல்லி இருந்தேன். காளியம்மாள் தனது கடிதத்தில் நான் வருத்தத்துடன் விலகுகிறேன் என்றுதான் சொன்னாரே தவிர ஒரு இடத்தில் கூட தவறாக சொல்லவில்லை. இது களையுதிர் காலம் என்கிறார். நாம் தமிழர் கட்சிக்கு, அந்த தத்துவத்திற்கு அழிவே இருக்காது. தலைமை வேண்டுமானால் இல்லாமல் போகலாம். ஆனால் இந்த தத்துவத்திற்கு அழிவு என்பதே கிடையாது. இன்று இல்லாவிட்டாலும் இன்னும் 100 ஆண்டு காலம் கழித்து வெல்லும். ஆனால் சீமானின் தலைமையின் கீழ் ஒரு காலமும் வெல்லாது. அண்ணாவிற்கு இருக்கும் நம்பிக்கை சீமானுக்கு உள்ளதா?. நெடுஞ்செழியன், அன்பழகன், கலைஞர், மதிவாணன், கண்ணதாசன், ஈவிகே சம்பத் இன்னும் எத்தனையோ பேர் இருந்தனர். பொதுக்கூட்டங்களில் அண்ணா முதலில் பேசிவிட்டு, எம்ஜிஆரை இறுதியில் பேச வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கை சீமானுக்கு இருக்கிறதா?

தன்னம்பிக்கையோடு இந்த அரசியல் வெல்ல வேண்டும் என்று வருகிறவர்களை எல்லாம் துரோகி என்று சொல்கிறார். அப்போது நாம் தமிழர் கட்சி என்ன துரோகி பட்டறை வைத்துள்ளதா? வந்தவனை வீரனாக்கியது என்றால் நீங்கள் பெரு வீரன், இருப்பவர்களை எல்லாம் துரோகி ஆக்கினால் நீங்களும் துரோகிதான். தமிழ்தேசிய நீரோட்டத்தில் பெரும் அடைப்பு சீமான்தான். அவர் இல்லாவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். விஜய் கட்சி 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கட்சி அமைப்பின் முக்கியத்தும் குறித்து பேசினார். தொண்டர்கள் தான் கட்சியின் வேர்கள்,விழுதுகள் என்கிறார் ஒரே வருடத்தில். ரசிகர்கள் மன்றத்தில் இருந்த எல்லோருக்கும் பொறுப்புகளை தருகிறார். அரசியல்படுத்துகிறார். ஆனால் நாங்கள் வேராக இருந்தவர்களை களை என்கிறீர்கள். பயிர்களை அழித்துவிட்டு களைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் சொல்வது சரிதான் இது களைகளை வளர்க்கும் காலம். எல்லோரும் அல்ல. அங்கும் சில நல்ல பயிர்கள் உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ