Homeசெய்திகள்கட்டுரைபெரியாரும் பெண்களும்

பெரியாரும் பெண்களும்

-

- Advertisement -

இரா.உமா

மார்ச் 8 உலக மகளிர் நாள் :

‘போற போக்கப் பாத்தா நம்ம முதலமைச்சரு, இந்த நாடே பெண்களுக்குத்தான்னு சொல்லிடு வாரு போலிருக்கே’ என்று ஆண்கள் செல்ல மாகக் கோபித்துக் கொள்கிறார்கள்! அந்த அளவிற்குப் பெண்கள் மேம்பாட்டுக்கான திட்டங்களைத் தீட்டி திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.பெரியாரும் பெண்களும்

விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், வேலை வாய்ப்பில் 40% ஒதுக்கீடு, பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டம், பிங்க் ஆட்டோ திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள், பெண்களை பல வகைகளிலும் ஊக்கப்படுத்தி முன்னேற்றி வருகின்றன.

நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் போகின்ற இடங்களில் எல்லாம், பெண்களும், கல்லூரி மாணவிகளும் திரண்டு வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, நன்றி சொல் கிறார்கள். அண்ணன் என்றும், அப்பா என்றும், மகன் என்றும் உறவு கொண்டாடுகிறார்கள்.

இந்தியத் துணைக்கண்டத்தில் உயர் கல்விக்குப் போகும் பெண்களின் விகிதம் தமிழ் நாட்டில்தான் கூடுதல்; தொழிற்சாலைகளில் வேலைக்குப் போகும் பெண்களில் 48% பேர் தமிழ்நாட்டுப் பெண்கள்; பெண்கள் தொடங்கும் ஸ்டார்ட்டப்களுக்கு சிறப்பு முன்னுரிமை, விளைவு கல்வி, தொழில் என அனைத்திலும் சிறந்து நிற்கிறார்கள் தமிழ்நாட்டுப் பெண்கள்.பெரியாரும் பெண்களும்

நம்முடைய இனமானத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் ஆசைப்பட்டாரே. ‘நீங்கல்லாம் சுதந்தரமான ராணியாகனும், ராக்கெட்ல போகனும், ஏரோப்பிளேன் ஓட்டனும்” என்று. அந்தக் கனவை நனவாக்கிக் காட்டிக் கொண்டிருக்கிறார் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், சுய சிந்தனையோ, பொருளாதார சுதந்திரமோ பெண்களுக்குக் கூடாது என்ற பழமைலோகம் ஈரோட்டு பூகம்பத்தால் தரை மட்டமாக்கப்படுவதைக் காணச் சகிக்காத பார்ப்பனிய சங்கிக் கும்பல், டில்லி ஆட்சி கையில் இருக்கும் அதிகார மமதையில் இங்கே சில சூத்திர அடியாட்களை பணத்தால் அடித்து களத்தில் இறக்கி விட்டிருக்கிறது.

அவர்கள் தந்தை பெரியாருக்கு எதிராகப் பெண்களைக் கொண்டுவந்து நிறுத்தப் பார்ககிறார்கள். அதில் தோல்விதான் காணுகிறார்கள் என்றபோதும், அவதூறுகளைத் தொடர்கிறார்கள் தரங்கெட்டவர்கள்.

பெண்களின் கர்ப்பப்பையை அறுத்தெறியச் சொன்னார் பெரியார்.

பறைச்சிகளெல்லாம் ரவிக்கை அணியத் தொடங்கிவிட்டதால் துணி விலை ஏறிவிட்டது என்றார் பெரியார்.

இந்தத் தன்மையில் போகிறது பாஜக ஆர்.எஸ்.எஸ்.கூலிகளின் அவதூறு பிரச்சாரம். பாலியல் இச்சையை அம்மா மகன் என்ற வரைமுறை இன்றி யாரிடம் வேண்டுமானாலும் தீர்த்துக் கொள்ளலாம் என்றார் பெரியார் என சிறுமதியாளன் ஒருவன் சொல்கிறான், ஆதாரம் கேட்டால் ஆமையைப் போல எண்சாண் உடம்பையும் உள்ளிழுத்துக் கொள்கிறான் பங்களாவாசியான பிச்சைக்காரன் ஒருவன். ஈவெராவின் பிம்பம் உடைபடுகிறது எனத் தலைப்பிட்டு தனக்குத்தானே சொரிந்து கொள்கிறார் அந்தப் பிச்சைக்காரனின் பேராசான், சரி போகட்டும்.

நாம் ஆதாரமின்றி எதையும் பேசுவதில்லை, அவதூறுகளை எளிதில் விடுவதுமில்லை.

பெரியாரும் பெண்களும்

தந்தை பெரியார் கர்ப்பப்பையை அறுத் தெறியச் சொன்னாரா? ஆம், சொன்னார். சங்க இலக்கியம் தொடங்கி சங்கிகளின் மனுநீதி வரை பெண்ணை ஆணின் சுகத்துக்கானவளாகவும் பிள்ளைபெறும் இயந்திர மாகவும் பத்திரப் பதிவு செய்து வைத்திருக்கின்ற இந்தச் சமூகத்தின் அயோக்கியத் தனத்தைப் பெண்களுக்குப் புரிய வைப்பதற்கு சற்று தடித்தச் சொற்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. பெரியார் அதைத்தான் செய்தார். சாதி ஒழிப்புக்கும், பெண் விடுதலைக்கும் தடையாக எது இருந்தாலும் அதைத் தகர்த்தெறியத் துணிந்தவர் அவர்.

1930 ஏப்ரல் 4ஆம் நாளிட்ட குடியரசில் “கர்ப்பத்தடை” என்னும் தலைப்பில் பெரியார் எழுதுகிறார்.

“பெண்கள் விடுதலையடையவும், சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம்… பொதுவாகப் பெண்களின் விடுதலைக்கும் சுயேச்சைக்குமே கர்ப்பம் விரோதியாயிருப்பதால், சாதாரணமாய் பெண்கள் பிள்ளை பெறுவது என்பதை அடியோடு நிறுத்திவிட வேண்டும் என்கிறோம்.

இருவருக்கும் (பெண்ணுக்கும் ஆணுக்கும்) அவர்களது சுயேச்சையையும் விடுதலையையும் கெடுப்பது இந்தக் குழந்தைகள், குஞ்சுகள் என்பவைகளேயாகும்.  அதிலும் பெண்களுக்குச் சொத்தும், வருவாயும், தொழிலும் இல்லாததால் குழந்தைகளை வளர்க்க மற்றவர்கள் ஆதரவை எதிர்பார்த்தே தீரவேண்டியிருக்கிறது. அதனாலதான் நாம் கண்டிப்பாய்ப் பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆகவேண்டும் என்கிறோம்.”

பெரியாரும் பெண்களும்

“கர்ப்ப ஆட்சி” என்று ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார் பெரியார். மேலும் கர்ப்பத்தடை குறித்து 1928 முதலே அய்யா பெரியார் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். அத்தனையும் பெரியார் திடல் நூலகத்தில் உள்ளன. அறிவு நாணயமும், உண்மையை எதிர்கொள்ளும் துணிச்சலும் இருந்தால், பிச்சைக்கார சீடனும் பண்ணையார் ஆசானும் அங்கு சென்று படித்துக் கொள்ளலாம்.

அடுத்து, “பறைச்சிகளெல்லாம் ரவிக்கை அணியத் தொடங்கிவிட்டதால் துணி விலை ஏறி விட்டது” என்று பெரியார் எவ்வளவு இழி வாகப் பேசியிருக்கிறார் பாருங்கள் என படம் காட்டுகிறார்கள். அது நாக்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட பாதி படச்சுருள் என்பதை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும்.

1968 டிசம்பர் 11ஆம் நாள் சென்னை அயன்புரத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் அய்யா பெரியார் அவர்கள் பேசியதை, திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எடுத்துக்காட்டுகிறாா். “தான் பறையன் எனக் கேவலமாகச் சொன்னதாக தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லை சொன்னாலும், அதை ஒழிப் பதற்காகச் சொன்னதுதான்.

எலெக்சன் நேரத்தில் இப்படியெல்லாம் செய்வது சாதாரணம். ராமசாமி நாயக்கர் பறைச்சியெல்லாம் ரவிக்கை போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு, தாழ்த்தப் பட்ட மக்கள் அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று வால்போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள்.பெரியாரும் பெண்களும்

நான் சொன்னது உண்மைதான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்கு முன் ரவிக்கை போடக்கூடாது; போட்டால் அடிப்பார்கள். மேலே துணியே போடக்கூடாது. அப்படி இருந்த சமுதாயம் காலம் மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கிறது: இன்றைக்கு ரவிக்கை இல்லாமல் பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். இதைக் கொண்டு அந்த இன மக்களை எனக்கு விரோதமாகத் தூண்டவும். நான் ஆதரிக்கின்ற கட்சிக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதேயாகும்”

இவை போன்ற அவதூறு பிரச்சாரங்கள் அன்றே தொடங்கிவிட்டன. அவற்றிற்கு அய்யா பெரியார் அவர்களே பதிலடிகளும் தந்து, பல தரமான சம்பவங்களையும் செய்திருக்கிறார். ஆனாலும் காலந்தோறும் காசுக்கு விலைபோகும் சீமான்களும் பேராசான்களும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் தற்குறித்தனமான பேச்சுக்களைப் பெண்கள் கண்டு கொள்ளவும் இல்லை, மதிக்கவும் இல்லை. மாறாக “எங்க நல்லதுக் குத்தான பெரியார் அய்யா பேசியிருக்காங்க” என்ற ஒற்றை வரியில், ஓரமா போயி விளை யாடுங்கடா என்று சொல்லாமல் சொல்லி விட்டு, “ஸ்டாலின் பஸ்சில் ஏறி பயணத்தைத் தொடர்கிறார்கள்.

திராவிட வரலாற்றுத் தடத்தில்…

MUST READ