பனாமா கால்வாய் இப்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வர்த்தகப் போரின் ஆரம்பத்தில் சீனாவிற்கு, டிரம்ப் அளித்த முதல் அடியாக இது கருதப்படுகிறது. அமெரிக்க நிறுவனமான பிளாக் ராக் பனாமா கால்வாயின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியுள்ளது. டிரம்ப் தனது உரையில், “பனாமா கால்வாய் அமெரிக்கர்களால் அமெரிக்கர்களுக்காக கட்டப்பட்டது. மற்றவர்களுக்காக அல்ல. ஆனால், மற்றவர்கள் அதைப் பயன்படுத்தலாம்” என்று கூறியுள்ளார்.
சீனாவுக்கு கால்வாய் மீது எந்தவிதமான செல்வாக்கும், கட்டுப்பாடும் இருப்பதாக டிரம்ப் எந்த காரணத்தையும் வழங்கவில்லை. ஹாங்காங்கை தளமாகக் கொண்ட நிறுவனம், பனாமா கால்வாயில் உள்ள இரண்டு பெரிய துறைமுகங்களில் அதன் பெரும்பான்மையான பங்குகளை அமெரிக்க நிறுவனமான பிளாக்ராக் நிறுவனத்திற்கு விற்றுள்ளது. கால்வாய் சீன கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், முக்கிய கப்பல் பாதையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறிய சில வாரங்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் வந்துள்ளது.
அமெரிக்க நிறுவனமான பிளாக் ராக் இந்தப் பங்கை தோராயமாக $22.8 பில்லியனுக்கு வாங்கியுள்ளது. ஹாங்காங் கோடீஸ்வரர் லி கா-ஷிங்கிற்குச் சொந்தமான ஹட்சிசன், சீன அரசுக்கு சொந்தமானது அல்ல. ஆனால் ஹாங்காங்கில் அதன் தளம் இருப்பதால் அது சீன நிதிச் சட்டங்களின் கீழ் செயல்படுகிறது. இது 1997 முதல் துறைமுகங்களை இயக்கி வருகிறது.
இந்த ஒப்பந்தம் உலகெங்கிலும் உள்ள 23 நாடுகளில் மொத்தம் 43 துறைமுகங்களை உள்ளடக்கியது. இதில் இரண்டு கால்வாய் முனையங்களும் அடங்கும். ஒப்பந்தத்தின் இறுதிப் பதிப்பிற்கு இன்னும் பனாமா அரசின் ஒப்புதல் தேவைப்படும்.
82 கி.மீ நீளமுள்ள பனாமா கால்வாய் மத்திய அமெரிக்கா வழியாக செல்கிறது. அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையிலான முக்கிய பாதையாகும். ஒவ்வொரு ஆண்டும், 14,000 கப்பல்கள் இதன் வழியாக செல்கின்றன. இதில் கார்கள், இயற்கை எரிவாயு மற்றும் பிற பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன் கப்பல்கள் மற்றும் இராணுவக் கப்பல்கள் அடங்கும்.
பனாமா கால்வாய் 1900களின் முற்பகுதியில் கட்டப்பட்டது. 1977 வரை அமெரிக்கா கால்வாய் மண்டலத்தின் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனால், ஒப்பந்தங்கள் படிப்படியாக அந்தப் பகுதியை பனாமாவிடம் திருப்பி அனுப்பின. கூட்டுக் கட்டுப்பாட்டு காலம் முடிந்த பிறகு, 1999 ஆம் ஆண்டு பனாமா கால்வாயின் முழு கட்டுப்பாட்டையும் ஏற்றுக்கொண்டது.