லண்டனில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் கார் முன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவரது காரை நிறுத்தி தாக்க முயன்றனர். அவரது காரின் முன் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்தியக் கொடியை கிழித்து எறிந்தனர். அப்போது லண்டன் காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெளியுறவு அமைச்சரின் பாதுகாப்பில் ஏற்பட்ட இந்தப் பெரிய குறைபாட்டை இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், வெளியுறவு அமைச்சரின் லண்டன் பயணத்தின் போது நடந்த பாதுகாப்பு மீறலின் காட்சிகளை நாங்கள் பார்த்துள்ளோம். பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் இந்த சிறிய குழுவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம். சில சக்திகளால் ஜனநாயக சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை நாங்கள் கண்டிக்கிறோம். இதுபோன்ற விஷயங்களில் இங்கிலாந்து அதன் ராஜதந்திர கடமைகளை நிறைவேற்றும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டுச் சென்றபோது நடந்தது. சமூக ஊடகங்களில் பரவி வரும் வயர் வீடியோவில், ஒரு நபர் தனது காரை நோக்கி ஓடி இதியாவின் மூவர்ணக் கொடியைக் கிழிக்க முயன்றார். அங்கு இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் அந்த நபரைப் பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
கடந்த சில ஆண்டுகளில், கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிகளவில் செயல்படத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக இந்தியாவின் கவலைகள் அதிகரித்துள்ளன. காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஒவ்வொரு நாளும் இங்கு இந்தியாவுக்கு எதிரான சில செயல்களைச் செய்து வருகின்றனர். காலிஸ்தானி ஆதரவாளர்கள் இங்கிலாந்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது இது முதல் முறை அல்ல.
2023 ஆம் ஆண்டில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் இந்திய தூதரகத்திற்குள் நுழைந்து ஒரு சலசலப்பை உருவாக்கினர். அங்கு ஏற்றப்பட்டு இருந்த மூவர்ணக் கொடி அவமதிக்கப்பட்டது. அதை கழற்ற முயன்றனர். தூதரகத்திற்கு வெளியே இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதெல்லாம் இங்கிலாந்தில் நடந்தபோது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அங்கு பிரதமராக இருந்தார். கனடாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே காலிஸ்தானி ஆதரவாளர்கள் ஒரு சலசலப்பை உருவாக்கினர்.